மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜி சாலை என்று பரவும் வீடியோ உண்மையா?
வட இந்தியாவில் போடப்பட்ட மோடியின் ஸ்பேஸ் டெக்னலாஜி சாலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
சாலை ஒன்றிலிருந்து நீர் வெளியே பீய்ச்சி அடிக்க, வாகன ஓட்டிகள் ஒதுங்கிச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் விண்வெளி தொழில்நுட்பத்தை வைத்து சாலைகள் கண்காணிக்கப்படும் என்று மோடி முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய ஆடியோ ஒலிக்கிறது. நிலைத் தகவலில், "வட இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட மோடியோ மாடல் பல இடங்களில் ஸ்பிரே டெக்னாலஜி அதுதான் மோடி சொன்ன ஸ்பேஸ் டெக்னாலஜி ரோடுகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு பதிவில் இந்த சாலை "உலக விஞ்ஞானிகள் அதிரும் வண்ணம்…" அமைக்கப்பட்டது என்ற அர்த்தத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோக்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் பாஜக ஆட்சியில் மிக மோசமான முறையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சில இடங்கள் உண்மையாக இருந்தாலும் பல வீடியோக்கள். புகைப்படங்கள் போலியானதாகவே இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. தற்போது சாலையிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ இந்தியாவைச் சார்ந்ததா என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது கவுதமாலா நாட்டில் உள்ள சாலையின் நிலை என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்த பதிவுகள் நமக்குக் கிடைத்தன. ஸ்பானிஷ் மொழியில் வெளியிடப்பட்டிருந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
உண்மைப் பதிவைக் காண: prensalibre.com I Archive
தொடர்ந்து தேடிய போது ஸ்பானிஷ் மொழியில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில் வில்லா நியூவாவில் இருந்த பசிபிக் செல்லும் சாலையில் விரிசல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2024 செப்டம்பர் 12ம் தேதி ஏற்பட்ட மழைக்குப் பிறகு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Google Map
வேறு ஆதாரங்கள் உள்ளதா என்று தேடிய போது, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரை கிடைத்தது. அதில் அந்த இடத்தில் கூகுள் ஸ்ட்ரீட் புகைப்படத்தைக் கண்டறிந்து வைத்திருந்தனர். அதுவும் வீடியோவில் இடம் பெற்ற இடமும் ஒன்றாக இருப்பதைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த சாலை இந்தியாவைச் சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்தன.
முடிவு:
கவுதமாலா நாட்டில் சாலையில் ஏற்பட்ட பாதிப்பு வீடியோவை இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சியில் ஸ்பேஸ் டெக்னாலஜி பயன்படுத்தி அமைக்கப்பட்ட சாலை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel