
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive
எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் விழுந்த வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பழனிசாமி முகரையில் செருப்பு வீச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தின் போது தொண்டர் ஒருவர் வீசிய செல்போன் எடப்பாடி பழனிசாமி மீது விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புகைப்படம் எடுக்கும்போது செல்போன் தவறுதலாக விழுந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை தெளிவாக பார்த்தாலே மேலே வந்து விழுந்தது செருப்பு இல்லை, செல்போன்தான் என்பதைத் தெளிவாகக் காணலாம். இதை எப்படி செருப்பு என்று மாற்றிப் பகிர்கின்றார்கள் என்று தெரியவில்லை.
ஒருவேளை அவர்கள் பதிந்த வீடியோவை எடுத்த ஊடகம் அப்படி ஏதும் செய்தி வெளியிட்டுள்ளதா என்று அறிய ஆய்வு செய்தோம். நியூஸ் தமிழ் 24X7 மற்றும் பாலிமர் செய்தி தொலைக்காட்சி அளித்த வீடியோவையே பலரும் எடப்பாடி மீது விழுந்த செருப்பு என்று பதிவிட்டு வருகின்றனர். முதலில், நியூஸ் தமிழ் 24X7 வெளியிட்ட செய்தியை தேடி எடுத்தோம். அதில், “சற்றும் எதிர்பாராமல் EPS மீது பறந்து வந்து விழுந்த Cellphone – பதறிப்போன தொண்டர்கள்” என்று தான் இருந்தது. செய்தியில் செருப்பு வீசப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.
அடுத்ததாக பாலிமர் வெளியிட்ட வீடியோ செய்தியை தேடி எடுத்தோம். அதிலும் கூட “திடீரென இ.பி.எஸ். மீது எங்கிருந்தோ இருந்து வந்து விழுந்த செல்போன்” என்று தான் இருந்தது. இவை எல்லாம் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டது என்ற தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசப்பட்ட நிகழ்வை தவறாக செருப்பு வீசப்பட்டது என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…