
துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முஸ்லிம்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உதயநிதி ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முஸ்லிம்களுக்கும் தீபாவளிக்கும் என்னயா சம்பந்தம்..? சனாதனத்தை ஒழிக்க முஸ்லிம்களுக்கு தீபாவளி பட்டாசு – பரிசு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க தொண்டர்கள் தீபாவளியைக் கொண்டாடினாலும், தி.மு.க தலைமை கொண்டாடுவது இல்லை, வாழ்த்தும் கூறுவது இல்லை. உண்மை அப்படி இருக்க, பொது மக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீபாவளி பரிசு வழங்கியதாகக் கூறப்படும் தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த பதிவு உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோவில் ANI செய்தி நிறுவனத்தின் லோகோ உள்ளது. எனவே, உதயநிதி ஸ்டாலின் தீபாவளி பரிசு வழங்கினார் என்று அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கத்தைப் பார்த்தோம். அதன் ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ நமக்குக் கிடைத்தது.
அக்டோபர் 23, 2024 அன்று இந்த வீடியோவை ANI செய்தி நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது. அதில், “சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க-வின் 75வது ஆண்டு விழாவையொட்டி மக்களுக்கு நிவாரண உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த வீடியோவைத்தான் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு தீபாவளி பரிசு வழங்கியதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால் ஏஎன்ஐ நிறுவனமோ எந்த இடத்திலும் தீபாவளி பரிசு என்று கூறவில்லை.
அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கியது தொடர்பான பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில், “முக்கால் நூற்றாண்டு காலம் இந்திய ஒன்றியத்தின் அரசியல் போக்கினை தீர்மானித்த முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மற்றும் கழக பவள விழா ஆண்டின் நிறைவை முன்னிட்டும், நம் #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 119-அ வட்டம், வி.எம் தெரு பகுதியைச் சேர்ந்த 1000 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவியை இன்று வழங்கினோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இது தீபாவளி பரிசு இல்லை என்பது உறுதியானது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் முஸ்லிம்களுக்கு பட்டாசு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் என்ன வழங்கப்பட்டது என்பதை அறிய ஆய்வு செய்தோம். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில் இடம் பெற்ற புகைப்படத்தில் அது என்ன பொருள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதில், “pigeon rapido cute induction cooktop” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இன்டெக்ஷன் ஸ்டவ் எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் ஸ்டவ்வை அவர் வழங்கியதும் தெளிவாகிறது.
தி.மு.க-வின் 75வது ஆண்டு விழாவையொட்டி உதயநிதி ஸ்டாலின் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய வீடியோவை தீபாவளி பரிசுப் பொருள் வழங்கியதாக தவறாகப் பகிர்ந்திருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க 75வது ஆண்டு விழாவையொட்டி தன் தொகுதி மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வீடியோவை முஸ்லிம்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel I Instagram

Title:முஸ்லிம்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினாரா உதயநிதி?
Fact Check By: Chendur PandianResult: False
