பாலத்தில் சிமெண்ட் சாலைக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டது என்று வெளியான வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாலத்தில் சிமெண்ட் சாலைக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது, பாலத்தில் பள்ளம் உள்ளது, பாலம் கட்டியதில் லஞ்சம், ஊழல் உள்ளது என்று புதுச்சேரியில் உள்ள பாலம் பற்றி ஒருவர் புகார் கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "திராவிட மாடல்ன்னா சும்மாவா..! இதுவும் ஒருவகை விடியல் தான்..! #ADMK_VNR #DMKFailsTN" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புதுச்சேரியில் பாலம் கட்டியதில் ஊழல் என்று ஒருவர் புகார் கூறியிருந்தார். அவரது குற்றச்சாட்டுத் தொடர்பான வீடியோவை யூடியூப் சேனல் ஒன்று வெளியிட்டிருந்தது. அப்போதே இந்த வீடியோவில் புதுச்சேரி என்ற பகுதியை மட்டும் அகற்றிவிட்டு தமிழ்நாட்டில் நடந்தது போன்று சிலர் வதந்தி பரப்பலாம் என்று எதிர்பார்த்தோம். அதே போன்று தமிழ்நாட்டில் நடந்தது போன்று இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

புதுச்சேரியில் தி.மு.க ஆட்சியில் இல்லை. அதன் கூட்டணிக் கட்சியும் ஆட்சியில் இல்லை. என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அங்கு ஆட்சியில் உள்ளது. இந்த அரசை திராவிட அரசு என்று கூற முடியாது. தமிழ்நாட்டில் எதிர்மறையாக நடக்கும் எல்லா விஷயத்துக்கும் 'விடியல் மாடல்', 'திராவிட மாடல்' என்று எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் விமர்சிப்பது வழக்கம். விடியல், திராவிட மாடல், டிஎம்கே ஃபெயில்ஸ்டிஎன் (DMKFailsTN) என்று எல்லாம் குறிப்பிட்டிருப்பதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்று குறிப்பிடுகிறது என்பது உறுதியாகிறது. எனவே, இந்த புகார் தமிழ்நாடு அரசுக்கு எதிராக எழுந்ததா என்று ஆய்வு செய்தோம்.

"Cement road மேல tar road போட்ட விஞ்ஞானி யாருடா?" என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்ட தலைப்பை டைப் செய்து தேடினோம். அப்போது அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் முழு வீடியோவும் கிடைத்தது. அதில் புகார் கூறிய நபர் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுத்தம் சுந்தர ராஜன் என்றும் புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள 100 அடி சாலை மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் என்றும் கூறியிருந்தனர்.

வீடியோவின் 2.07வது நிமிடத்தில், "ஊழல்... இதனாலேயே வீணா போகுது பாண்டிச்சேரி" என்று அவர் கூறுகிறார். இதன் மூலம் இந்த பாலம் தமிழ்நாட்டில் இல்லை, புதுச்சேரியில் உள்ளது என்பது தெளிவாகிறது. அது மட்டுமின்றி, அந்த வீடியோ பதிவின் தலைப்பாக, "“Cement Road மேல Tar Road போட்ட விஞ்ஞானி யாருடா..?”- தனி ஒருவன் செய்த புரட்சி! | Puducherry | Cement Road | Viral" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை வேறு ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. அவற்றிலும் புதுச்சேரியில் சுத்தம் சுந்தர்ராஜன் என்ற சமூக ஆர்வலர் செய்த சம்பவம் என்று எல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்தன.

நம்முடைய ஆய்வில் சிமெண்ட் சாலை மீது தார் சாலை அமைத்த புத்திசாலி யார் என்று புதுச்சேரியில் உள்ள ஒரு பாலம் கட்டியதில் முறைகேடு என்று சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம்சாட்டிய வீடியோவை எடுத்து, தமிழ்நாட்டில் இந்த பாலம் உள்ளது போலவும், திமுக அரசு இதற்கு காரணம் என்பது போலவும் தவறான தகவலை பரப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புதுச்சேரியில் பாலம் கட்டியலில் முறைகேடு என்று சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கூறிய வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘திராவிட மாடல் ஊழல் முறைகேடு பாலம்’ என்று பரவும் புதுச்சேரி வீடியோ!

Written By: Chendur Pandian

Result: False