
தேசியக் கொடி விற்பனையிலும் மோடி கொள்ளையடிக்கிறார் என தென்னிந்திய நெசவாளர்கள் சங்கம் கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி! பாலியெஸ்டர் துணி உற்பத்தி செய்யும் அம்பானி நிறுவனத்தின் இலாபத்துக்காக இந்திய தேசியக்கொடிகள் கதர் துணியால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் என்ற நியதியை மாற்றியுள்ளார் பிரதமர் மோடி! – தென்னிந்திய நெசவாளர்கள் சங்கம் கண்டனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 13ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தேசிய கொடிகள் கதர், பருத்தி உள்ளிட்ட குறிப்பிட்ட வகை நூல்களில் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தி பாலியஸ்டரிலும் தயாரிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து பாலிஸ்டர் கொடிகள் உற்பத்தி அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. பாலிஸ்டர் துணியில் தேசியக் கொடி தயாரிப்பது ஏன் என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை.
தென்னிந்திய நெசவாளர் சங்கம் என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததா, அதை புதிய தலைமுறை செய்தியாக வெளியிட்டிருந்ததா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ்கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை பயன்படுத்தும் நியூஸ் ஃபாண்ட் போல இல்லை. மேலும், அதன் பின்னணி டிசைனிலும் வேறுபாடுகள் இருப்பதை காண முடிந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை புதிய தலைமுறைதான் வெளியிட்டதா என உறுதி செய்ய, அதன் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் 2022 ஆகஸ்ட் 12, பிற்பகல் 1.30க்கு வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, புதிய தலைமுறை 2022 ஆகஸ்ட் 12, பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிட்ட நியூஸ் கார்டை தேடினோம். ஈமு கோழி தொடர்பான நியூஸ் கார்டைத்தான் அந்த நேரத்தில் புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்கள் இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தனர்.
தென்னிந்திய நெசவாளர் சங்கம் என்று ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு சங்கமும் இருப்பதாகவோ, அவர்கள் அறிக்கை வெளியிட்டதாகவே செய்திகள் கிடைக்கவில்லை. நம்முடைய தேடலில் அரசின் கோ-ஆப்டெக்ஸ் என்ற கூட்டுறவுச் சங்கம் இருப்பது தெரிந்தது. தமிழ்நாடு நெசவாளர் சங்கம் என்று சமூக ஊடகங்களில் ஒரு பக்கம் இருந்தது. ஆனால் அதிலும் இப்படி எந்த ஒரு கண்டன அறிக்கையும் வெளியாகவில்லை. அதன் நிர்வாகிகளைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், சரியான பதில் நமக்குக் கிடைக்கவில்லை.
முடிவு:
தேசியக் கொடி விற்பனையிலும் மோடி மோசடி என்று புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தேசியக் கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி என புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False

சரிங்க சகோ தகவலை சரிவர உறுதி செய்தமைக்கு நன்றி 🙏
ஒரு சிறிய வேண்டுகோள். இது போன்ற போலியான தவறான பதிவு முதன்முறையாக வெளியிடப்படும் போது அந்நபரை உடனடியாக கைது செய்தால் வதந்திகள் பரப்பப்பட்டு குறையும் என கருதுகிறேன்.