சினிமாப் பாட்டு பாடி, ஆடும் பாதிரியார்’ என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டை சார்ந்ததா?
கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பள்ளி விழாவில் சினிமா பாட்டுப் பாடி ஆடிய வீடியோவை சிலர் பகிர்ந்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று திராவிட கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலயா பாடலை பள்ளிக்கூட விழாவில் பாதிரியார் ஒருவர் பாடி ஆடும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், "ஏண்டா திக, திராவிட நாய்களா இதெல்லாம் ஸ்கூல் லிஸ்ட்ல வராத டா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பேசிய சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக, மற்ற மதத்தினர் செய்த செயல்களை எல்லாம் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறோம் என்று பல பழைய வீடியோக்களை எல்லாம் இப்போது நடந்தது போன்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவ பாதிரியார் என்றால் 24 மணி நேரம் சர்ச்சில் வழிபாடு செய்து கொண்டிருக்க வேண்டும் பதிவிட்டவர் கருதுகிறார் போல. ஏராளமான பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சிறுவர்களுக்கான விடுதிகளைக் கிறிஸ்தவ பாதிரியார்கள், மிஷனரிகள் நடத்தி வருகின்றனர். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாதிரியார்களும் மற்ற துறவு சபையைச் சார்ந்தவர்களும் மக்களுடன் மக்களாக இயல்பாக கலந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். இதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
இப்போது கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பள்ளியில் சினிமா பாட்டுப் பாடி நடனம் ஆடிய வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பார்க்கும் போதே ஏதோ பள்ளிக் கூட விழாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த வீடியோவில் தவறு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அவர் ஆடி - பாடியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டது போல தெரியவில்லை. அப்படி ஏதும் பாதிப்பு ஏற்பட்டதாக பதிவிட்டவர் கருதியிருந்தால் அது பற்றி அவர் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, அது தொடர்பாக ஆய்வு செய்யவில்லை. இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
வீடியோவை பார்க்கும் போது மேடையில் மலையாளத்தில் பேனர் அடிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதன் மூலம் இது தமிழ்நாட்டில் உள்ள பள்ளி இல்லை என்பதை அறிய முடிகிறது. இந்த வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பாதிரியார் வீடியோவை மற்றொரு பாதிரியார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால், அதில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I instagram.com
தொடர்ந்து தேடிய போது மற்றொரு இன்ஸ்டா பதிவு நமக்கு கிடைத்தது. அதில் #kannur #kavalayya #priest #song #stageprogram #Fr jithin vayalingal #payyannur #parishpriest என்று டேக் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள பள்ளியில் ஜித்தின் வயலிங்கல் என்ற பாதிரியார் இவ்வாறு நடனமாடியதாக, தெரியவந்தது. பாதிரியார் jithin vayalingal என்று யாராவது இருக்கிறார்களா என்று அறிய கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பாதிரியாரின் ஃபேஸ்புக் பக்கம் நமக்கு கிடைத்தது.
மேலும் அந்த பாதிரியார் குழந்தைகளுடன் பாடல் பாடி - நடனமாடிய மற்ற வீடியோக்களும் நமக்குக் கிடைத்தது. மற்றொரு வீடியோவில் அவர் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் வீடியோவும் கிடைத்தது. அதில் ‘’நான் தலசேரி என்ற பகுதியைச் சார்ந்தவன்,’’ என்று அவர் கூறுவதைக் கேட்க முடிகிறது. இதன் மூலம் இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்பதும் உறுதியாகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் எந்த ஒரு தவறான செயலையும் காணவில்லை. அப்படியே தவறாக இருந்தாலும் இது கேரளாவில் நடந்தது என்பதால் அந்த மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் சினிமா பாட்டு பாடி நடனமாடிய பாதிரியாரை கண்டிக்காத திராவிட இயக்கத்தினர் என்று பரவும் வீடியோ கேரளாவைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel