
ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நான் கலந்துகொள்வேன் என்று அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சசிகலா வெளியிட்ட ட்வீட் என்று ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் உடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ட்வீட்டில், “சகோதரர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வேன்” என்று உள்ளது. அதனுடன், “நம்மளுக்கு எல்லாம் சந்தோஷம் என்ன தெரியுமா நம்முடைய எதிரி நம்மள பாராட்டும்போது அதே போல்தான் சசிகலா அவர்கள் கழக தலைவர் அவர்களை அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று கூறிவிட்டார். ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு விழாவில் நான் கலந்துகொள்வேன் என்று சசிகலாவை கூறிவிட்டார். அப்ப எடப்பாடியின் நிலை மோசமாக தான் இருக்கும்” என்று உள்ளது.
இந்த பதிவை குவைத் திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Akkam Deen Deen என்பவர் 2021 பிப்ரவரி 18 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இந்த ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்து சென்னை திரும்பினார் அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா. அப்போது “பொது எதிரியை ஆட்சிக்கு வர விடக் கூடாது” என்று கூறினார். அ.தி.மு.க-வின் பொது எதிரி எப்போதுமே தி.மு.க தான் என்று இருக்கும்போது, மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு வருவேன் என்று சசிகலா கூறியதாக ட்வீட் பரவி வருவது ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால், சசிகலா அப்படி கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த ட்வீட் உண்மையானதுதானா என்று சந்தேகம் எழுந்தது. அந்த ட்வீட் உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம். ட்வீட் பதிவை டைப் செய்து தேடியபோது அப்படி ஒரு ட்வீட் V. K. சசிகலா என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து 2021 பிப்ரவரி 6ம் தேதி வெளியாகி இருந்தது.
இது உண்மையில் சசிகலாவின் ட்விட்டர் பக்கம்தானா என்று ஆய்வு செய்தோம். அவருடைய சுயவிவரக் குறிப்பு பக்கத்தை பார்த்தபோது இது சசிகலாவின் பக்கம் இல்லை என்பது தெரியவந்தது. சுய விவர குறிப்பில் கிண்டலுக்கானது (parody) என்றும், ஏ1ன் சகோதரி, மாஃபியா, மேசாடியில் ஈடுபடுபவர், ஜெயில் பறவை என்று இருந்தது. கவர் போட்டோவாக ஏ2 (குற்றவாளி 2) என்று இருந்தது. இதன் மூலம் இதற்கும் சசிகலாவுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

சசிகலாவுக்கு சமூக ஊடக பக்கம் எதுவும் உள்ளதா என்று தேடினோம். அவர் சமூக ஊடகத்தை பயன்படுத்துவது இல்லை என்று தெரிந்தது. இது தொடர்பாக தகவல் அறிய அ.ம.மு.க தலைமைக் கழகத்தைத் தொடர்புகொண்டோம். அவர்களுடன் பேச முடியவில்லை. அ.ம.மு.க மூத்த நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது சசிகலாவுக்கு சமூக ஊடகங்களில் கணக்கு எதுவும் இல்லை என்றார்.
சசிகலா பெயரில் இயங்கும் போலியான பக்கத்தில் வெளியான பதிவை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருவது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில், மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என்று சசிகலா கூறியதாக பகிரப்படும் ட்வீட் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சசிகலா பெயரில் பரவி வரும் ட்வீட்டர் கணக்கு உண்மையில் சசிகலாவுக்கு உரியது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என்று சசிகலா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
