
தனக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்தார் என்று ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சவுக்கு ஊடக ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவுக்கு சவுக்கு சங்கர் கமெண்ட் செய்தது போன்று ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி, “விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் @SavukkuMedia ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு சவுக்கு சங்கர், “உன் கண்டனத்த வெச்சு XXX? காப்பாத்துடா XXX” என்று கூறியது போன்று உள்ளது.

உண்மைப் பதிவைக் காண: Twitter
இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் பற்றி அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் பணியாற்றுபவர்களை போலீஸ் கைது செய்தது என்று கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதை சவுக்கு சங்கர் விமர்சித்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சவுக்கு சங்கர் சமீப காலமாக அதிமுக ஆதரவு கருத்துக்களை கூறி வந்தார். அவர் அதிமுக தலைமையை எதிர்த்து இப்படி ஆபாசமான கருத்தைப் பதிவிட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
முதலில் சவுக்கு சங்கர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியான பதிவுகளை பார்த்தோம். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் @EPSTamilNadu @AIADMKOfficial என்று சவுக்கு சங்கர் பதில் அளித்திருந்தார்.இந்த பதிவை சவுக்கு சங்கர் மே 3, 2024 பிற்பகல் 12:04க்கு பதிவிட்டிருந்தார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட்டிலும் சரியாக 12:04க்கு பதிவிட்டது போன்று இருந்தது. சவுக்கு சங்கர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தவறான கருத்தைச் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெளிவானது.

சவுக்கு சங்கரை போலீஸ் கைது செய்துள்ளதால். உண்மையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பதிவிட்டுவிட்டு, பிறகு அகற்றிவிட்டு, புதிதாக போஸ்ட் செய்தாரா என்பதை நேரடியாக உறுதி செய்ய முடியவில்லை. அவரது தரப்பைத் தொடர்புகொண்ட போது “சவுக்கு சங்கருக்கு ஆகாத கட்சியைச் சார்ந்தவர்கள் இப்படி செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை ஆபாசமான முறையில் விமர்சித்து சவுக்கு சங்கர் ட்வீட் செய்யவில்லை” என்றனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தன் நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த சவுக்கு சங்கர் என்று பரவும் எக்ஸ் போஸ்ட் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக சவுக்கு சங்கர் விமர்சித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
