‘’ தக்காளியை சாப்பிடும் பாம்பு; யாரும் தக்காளி வாங்க வேண்டாம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ பாம்பு கடிக்கும் தக்காளி .... இதை பார்த்த பிறகு தக்காளி வாங்கவே பயமாயிருக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. கீழே ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாம்பு ஒன்று தக்காளியை கடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், வீடியோவின் பின்னணியில் ஒருவர் பேசுகிறார். அவர், ‘’தக்காளியை கடித்து சாப்பிடும் பாம்பு; இதுபோன்று பாம்புகள் செய்வதால், தக்காளியில் விஷம் கலக்க வாய்ப்புள்ளது. எனவே, நாம் தக்காளி வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்,’’ என்று பேசுகிறார்.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோவை பலரும் பகிர்ந்து வரும் சூழலில், இதுபற்றி நாம் விவரம் தேடினோம். அப்போது, இதுபோன்றே ஒரு வீடியோ ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம். Deepak Kiran (drarshtalks) என்பவர் ‘’ தக்காளியை கடிக்கும் பாம்பு,’’ என்ற தலைப்பில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவின் பின்னணியில் ஒருவர் தெலுங்கில் பேசுகிறார்.

Instagram Link l Archived Link

இதன்படி, மேற்கண்ட வீடியோ தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பகிரப்பட்டு வரும் ஒன்று என தெரியவருகிறது. அத்துடன் இந்த வதந்தியை உண்மை என நம்பி, ஒவ்வொருவரும் தங்களது மொழியில் பின்னணிக் குரல் சேர்த்து பரப்புவதையும் காண முடிகிறது.

குறிப்பிட்ட வீடியோவை உற்று பார்த்தாலே ஒரு விடயம் எளிதில் விளங்கும். அது என்னவென்றால், அந்த பாம்பு தக்காளியை கடித்து சாப்பிடவில்லை. கடிக்க மட்டுமே முயற்சி செய்கிறது. மேலும், அந்த பாம்பின் வால் பகுதியில் ஒருவர் குச்சி ஒன்றை வைத்து அழுத்துகிறார். வலி தாங்காமல், தப்பிக்கும் நோக்கில் அந்த பாம்பு அருகில் உள்ள பொருளை (தக்காளி) கடித்து தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது. மற்றபடி, தக்காளியை கடித்து சாப்பிடவில்லை.

மேலும் பாம்புகள் ஒரு போதும் தாவர உணவுகளை சாப்பிடுவது கிடையாது. ஏனெனில், அவை அடிப்படையிலேயே அசைவ உண்ணிகள். அவற்றின் உடலமைப்பு ஒரு அசைவ உண்ணிக்கு ஏற்றபடியே அமைந்துள்ளது. தனது இரையாக மற்ற விலங்குகளையோ அல்லது சிறு பாம்புகளையோ அல்லது விலங்குகளின் முட்டைகளையோ அது பயன்படுத்துகிறது. சாதாரண பாம்பு முதல் மலைப்பாம்பு, அனகோண்டா வரை அனைத்துமே இப்படித்தான்…

கூடுதல் ஆதாரம் இதோ…

Snake General Introduction l Eating Habit and Body Function l PETMD

இறுதியாக, நாம் சென்னை லயோலா கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியரிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   தக்காளியை சாப்பிடும் பாம்பு; யாரும் தக்காளி வாங்க வேண்டாம்!
Claimed By :  Social Media User
Fact Check :  MISLEADING