“ஸ்டூலில் நிற்கும் சூர்யா கருத்து சொல்லலாமா?” – தனிமனித தாக்குதல் நடத்திய ஃபேஸ்புக் பதிவு
நடிகர் சூர்யா ஸ்டூல் ஒன்றில் நின்று கொண்டிருப்பது போன்ற திரைப்படத்தில் ஒரு காட்சியை வெளியிட்டு, முதலில் தரையில் இரண்டு கால்களும் நிற்கட்டும்... அதன் பிறகு கருத்து சொல்லலாம் தோழர் சூர்யா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின்விவரம்:
சிங்கம் படத்தில் வரும் காட்சி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா உள்ளனர். புகைப்படத்துக்குக் கீழே ஓவியம் போல கூடுதலாக சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் சூர்யா ஒரு ஸ்டூல் மீது ஏறி நிற்பது போன்று காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மொதல்ல உன் கால் ரெண்டும் தரையில நிக்கட்டும்.. அப்புறமா கருத்து சொல்லலாம் தோழர் சூர்யா..” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, JaiGanesh S Nadar என்பவர் 2019 ஜூலை 18ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் போன்ற பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா தன்னுடைய அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அவர் பேசியது, 10 கேள்விகளை அவர் எழுப்பியது ஆளும் பா.ஜ.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சூர்யா பேசியது சரியா, 10 கேள்விகள் நியாயமானதா, பா.ஜ.க-வினரின் பதிலடிகள் சரியா என்ற விவாதத்துக்குள் நாம் செல்லவில்லை. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நடிகர் சூர்யாவின் உயரத்தைக் கிண்டல் செய்து, முதலில் தரையில் நிற்கப் பாருங்கள், பிறகு கருத்து கூறலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக சிங்கம் படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை எடுத்து பயன்படுத்தியுள்ளனர். பார்க்க, படத்தின் ஒரு பகுதியை போட்டோஷாப் போன்ற புகைப்படத்தை எடிட் செய்யும் மென்பொருள் அல்லது ஆப்-பை பயன்படுத்தி மாற்றியுள்ளதுபோல் தத்ரூபமாக உள்ளது.
மேற்கண்ட பதில் உள்ளது போல் நடிகர் சூர்யா ஸ்டூல் மீது நின்று பேசின படம் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவாஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, வண்ண நிறத்தில் உள்ள பகுதி புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தன.
நம்முடைய தேடலில், சிங்கம் படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் சில கிடைத்தன. அதில், நடிகர் சூர்யா, அனுஷ்கா உள்ளிட்டவர்கள் சாதாரணமாக நின்று பேசும் சில காட்சிகள் கிடைத்தன. அதைப் பார்க்கும்போது ஸ்டூல் மீது நின்று பேசும் அளவுக்கு நடிகர் சூர்யா உயரம் குறைவானவர் போலத் தெரியவில்லை.
அடுத்த சம்பந்தப்பட்ட காட்சியின் பகுதியை சிங்கம் படத்தில் இருந்து எடுத்து ஆய்வு செய்தோம். அப்போது பாதம் பகுதி தெரியவில்லை என்றாலும் கூட, காலின் உடலின் கிட்டத்தட்ட 90 சதவிகித பகுதிகள் தெரிந்தன. அதனால், மேற்கண்ட ஃபேஸ்புக் படத்தில் இருந்தது போன்று ஸ்டூலில் நின்று பேசியிருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தது. சிங்கம் படத்தின் குறிப்பிட்ட அந்த பகுதியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இவர்கள் இருவரின் உயரம் என்ன என்று ஆய்வு மேற்கொண்டோம். சூர்யா உயரம் 1.70 மீட்டர் என்றும் நடிகை அனுஷ்கா உயரம் 1.78 மீட்டர் என்றும் தெரிந்தது. இருவருக்கும் 8 செ.மீ தான் வித்தியாசம்.
படத்தின் உண்மை காட்சி என்று வண்ண படத்தையும், உண்மையில் அந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் என்று ஓவியம் பகுதியை வரைந்துள்ளார்கள் என்று தெரிந்தது. உயரம் குறைவான சூர்யா, ஸ்டூல் மீது நின்று நடிப்பது போல பொய்யாக சித்தரிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.
பொய்யான படத்தை வெளியிட்டு, சூர்யா தரையில் நிற்க வேண்டும், அதன்பிறகு கருத்து சொல்லலாம் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம், உயரமானவர்கள் மட்டுமே கருத்து சொல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறார்களா என்று தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 (1) (a) படி அனைவருக்கும் பேச்சுரிமை வரையரை செய்யப்பட்டுள்ளது.
ஜாதி, மதம், பாலினம் என்று எந்த ஒரு காரணத்தை கூறியோ ஒருவரின் உரிமையை தடுக்கக் கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டம் ஆர்டிகிள் 15 சொல்கிறது. அப்படி இருக்கையில், ஒருவரின் உயரத்தைக் குறிப்பிட்டு கருத்து சொல்லக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
ஸ்டூல் மீது நிற்பது போன்ற பகுதி பொய்யாக சேர்க்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டூல் மீது நின்று நடிக்கும் அளவுக்கு சூர்யா உயரம் குறைவானவர் இல்லை. அப்படியே உயரம் குறைவாக இருந்தாலும் அது தனிநபர் சார்ந்தது. உயரத்துக்கும் கருத்து சொல்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
உயரம் குறைவானவர்கள் கருத்து சொல்லக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை.
நடிகர் சூர்யா, அனுஷ்கா ஒன்றாக இருக்கும் பல படங்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஸ்டூல் போட்டு நடிக்கும் அளவுக்கு இவர்கள் இருவருக்கும் உயர வித்தியாசம் இல்லை.
நடிகர் சூர்யா பற்றி விஷமத்தனமாக பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:“ஸ்டூலில் நிற்கும் சூர்யா கருத்து சொல்லலாமா?” – தனிமனித தாக்குதல் நடத்திய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False