சலூனில் கழுத்து மசாஜ் செய்ததில் உயிரிழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social

சலூனில் கழுத்தைத் திருப்பி நெட்டி எடுக்கும் போது நிலைகுலைந்த உயிரிழந்த நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சலூனில் முடி வெட்டுவதற்குப் பதில் தலைக்கு மசாஜ் செய்ய ஒருவர் வந்தது போலவும், அவருக்கு கழுத்தில் மசாஜ் செய்து நெட்டி எடுக்கும் போது நிலை குலைந்து அவர் உயிரிழந்தது போன்றும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் கீழ், “மிகவும் கவனம் தேவை. முடி திருத்தம் செய்யும் கடையில் கழுத்தை திருப்பி நெட்டி எடுக்கும் தருணம் நிலைகுலைந்து இறந்துவிட்டார். இவ்வாறு செய்வதை தவிர்க்கவும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “சலூன் கடைகளில் கவனம் தேவை கூடுமானவரை இது போன்ற செயல்களை அனுமதிக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சலூன் கடையில் கழுத்து மசாஜ் செய்த நபர் உயிரிழந்தது போன்று வீடியோ சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது. வீடியோவின் கடைசி பகுதியில் “இது உண்மை சம்பவம் இல்லை, பொது மக்கள் விழிப்புணர்வு அடையும் நோக்கில் எடுக்கப்பட்டது” என்று எச்சரிக்கை வாசகம் (Disclaimer) இடம் பெற்றிருந்தது என்பதால் அந்த வீடியோக்களை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உண்மையில் ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்றே நேரடியாக குறிப்பிட்டுள்ளனர். வீடியோவின் கடைசியில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருந்தாலும் கூட ஒருவர் இறந்துவிட்டார் என்று வீடியோவிலேயே குறிப்பிட்டுப் பதிவிட்டிருப்பதன் மூலம் இந்த வீடியோ உண்மை என்றே பலரும் கருதும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த வீடியோ உண்மை சம்பவத்தின் காட்சி இல்லை என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை பார்க்கும் போது ஏற்கனவே நாம் ஆய்வு செய்த “கோவையில் விற்கப்படும் சுகாதாரமற்ற பானி பூரி” ஸ்கிரிப்டட் வீடியோ பதிவாளர்கள் எடுத்தது போன்று இருந்தது. எனவே Sanjjanaa Galrani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட அந்த வீடியோ வெளியீட்டாளரின் பக்கத்திற்குச் சென்று பார்த்தோம்.

நவம்பர் 7, 2024 அன்று இந்த வீடியோவை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். மேலும், இதே சலூன் கடையை வைத்து வேறு ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். 3RD EYE என்ற யூடியூப் சேனல் பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. 

வீடியோ பற்றிய குறிப்பு பகுதியில், “இந்தச் சேனலில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகங்கள் மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளிலும் விழிப்புடன் இருக்க விழிப்புணர்வு சித்தரிப்பு காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது என்பதை நினைவு கொள்ளுங்கள். இந்த சேனல் சமூக விழிப்புணர்வு காணொளிகளைக் கொண்டு வருகிறது. இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சலூனில் கழுத்து மசாஜ் செய்த நபர் உயிரிழந்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சலூனில் கழுத்து மசாஜ் செய்வது தொடர்பாக விழிப்புணர்வு நோக்கில் எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோவை உண்மை என்று கருதி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:சலூனில் கழுத்து மசாஜ் செய்ததில் உயிரிழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False