
மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தன்னுடைய மகனைப் பார்த்த தாய் ஒருவர், கோபப்படாமல் அவர்களுக்கு அங்கேயே நிச்சயம் செய்து வைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இளம் ஜோடி ஒன்றுக்கு பெண்மணி ஒருவர் நிச்சயம் செய்து வைப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காதல் ஜோடிகளே உஷார்! இனி ஓடிப் பிடிக்க நேரமில்லை… நேரடியாக நிச்சயதார்த்தம் தான். அதிரடி காட்டிய தாய்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “மெட்ரோவில் காதல் ; அங்கேயே நிச்சயதார்த்தம்! அதிரடி காட்டிய தாய்!
மெட்ரோ ரயில் நிலையத்தில் ரகசியமாகச் சந்தித்த காதலர்களுக்கு, அங்கேயே நிச்சயதார்த்தம் செய்து வைத்து அதிரடி காட்டியுள்ளார் ஒரு தாய்!
தன்னுடைய மகன் காதலியுடன் இருப்பதைப் பார்த்த அந்தத் தாய், கோபப்படாமல் சாதுர்யமாகச் செயல்பட்டார். “இனி ஒளிந்து மறைந்து பேச வேண்டாம்” எனக் கூறி, இனிப்புகள் வழங்கி அங்கேயே ஆசி வழங்கினார்.
காதலைத் தடுக்காமல் கண்ணியமாக அங்கீகரித்த இந்தத் தாயின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலர்களே ஜாக்கிரதை, இனி அம்மாவிடம் சிக்கினால் நேராகக் கல்யாணம்தான்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஸ்கிரிப்டட் நாடாக வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதை உண்மை என்று நம்பி பலரும் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில், மெட்ரோ ஸ்டேஷனில் தன்னுடைய மகன் தன் காதலியுடன் அமர்ந்திருந்ததைக் கண்ட தாய் ஒருவர், அவர்களுக்கு அங்கேயே நிச்சயதார்த்தம் செய்து வைத்தார் என்று ஒரு வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
வீடியோவை பார்க்க செயற்கையாக, நாடகத்தனமாக உள்ளது. திடீரென்று ரயில் நிலையத்தில் தன்னுடைய மகனை அந்த தாய் பார்த்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிச்சயம் செய்ய பழங்கள், இனிப்புகள் என எல்லாம் எப்படி சரியாக வாங்கி வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. திடீரென்று தன் தாயைப் பார்க்கும் அந்த மகனுக்கும் சரி, காதலிக்கும் சரி எந்த ஒரு பரபரப்போ, பயமோ இல்லாமல் இருப்பது எல்லாம் இது ஸ்கிரிப்டட் வீடியோதான் என்பதை உறுதி செய்கின்றன.
ஆனால், ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யலாம் என்று தேடிய போது எந்த ஆதாரமும் கிடைக்காமல் இருந்தது. இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடியபோது, இந்த வீடியோவை chalte_phirte என்ற இன்ஸ்டாகிராம் ஐடி கொண்டவர் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவில் அவரும் இருக்கிறார். எனவே, இவர்தான் இந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால், இது ஸ்கிரிப்டட் வீடியோ என்று அவர் எந்த ஒரு குறிப்பையும் வெளியிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: instagram.com
அவர் வெளியிட்டிருந்த வீடியோவை பார்க்கும் போது, நிச்சயம் செய்யும் முடிவோடு அந்த இளைஞரின் பெற்றோர் வந்திருப்பது போல தெரிகிறது. அந்த பெண்ணின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்பது போல பேசுகிறார்கள். இங்கு நடக்கும் நிச்சயத்தை வீடியோ எடுத்து அந்த பெண்ணின் அப்பாவுக்கு அனுப்பும்படி அந்த பெண்மணி கூறுகிறார். இந்த வீடியோ உண்மையானது இல்லை என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் குழுவினர் இந்த வீடியோவை வெளியிட்டிருந்த chalte_phirte098 என்ற இன்ஸ்டாகிராம் ஐடி வைத்துள்ள நபரைத் தொடர்புகொண்டு பேசினர். அப்போது அவர், “இது உண்மை சம்பவம் அல்ல. என்னிடம் மற்றவர்கள் பகிர்ந்துகொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இதை உருவாக்கினோம். இதுவும் அப்படி ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்டட் நாடகம்தான்” என்று தெரிவித்துள்ளார். ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் வெளியிட்டிருந்த கட்டுரையை காண இங்கே கிளிக் செய்யுங்கள். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தன் மகனுக்கு மெட்ரோ ஸ்டேஷனில் நிச்சயதார்த்தம் செய்துவைத்த தாய் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ உண்மையில் ஸ்கிரிப்டட் நாடகம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:‘மெட்ரோவில் காதலியுடன் அமர்ந்திருந்த மகனுக்கு அங்கேயே நிச்சயம் செய்த தாய்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading


