
கிராமத்தில் பாதி மனிதன் பாதி பன்றியாக விசித்திரமான உருவத்தில் பன்றிக் குட்டி ஒன்று பிறந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I theriuma.net I Archive 2
இணைய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி பகிரப்பட்டுள்ளது. பன்றி போன்று தோற்றம் அளிக்கும் குழந்தை ஒன்றின் பல்வேறு புகைப்படங்கள் வைத்து செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாதி மனிதன் பாதி பன்றியாக விசித்திரமான உருவத்தில் பிறந்த குட்டி.. கிராமத்தில் நடந்த அதிசயம்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Varshika என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 19ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பன்றிக்கு மனிதக் குழந்தை பிறந்தது என்று சமூக ஊடகங்களில் அவ்வப்போது வதந்திகள் பரவும். முழு செய்திக் கட்டுரையாகவே இதை இந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். கிராமத்தில் பிறந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எந்த கிராமம் என்று குறிப்பிடவில்லை.
இந்த இணைப்பிலிருந்த செய்தியைப் பார்த்தோம். பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த சம்பவம் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். செய்தியின் உள்ளே ஆட்டுக்கு இந்த குட்டி பிறந்தது என்று குழப்பியிருந்தனர். “ஆட்டுக்கு பிரசவ வலி ஏற்பட்டதாம், உடனே சிசேரியன் மூலம் ஆட்டுக்கு குட்டி வெளியே எடுக்கப்பட்டதாம். ஆடு விசித்திர தோற்றமுடைய குட்டியை ஈன்றதால் மக்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “மரபணு மாற்றத்தால் இப்படி ஆகியிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறினார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

பிலிப்பைன்சில் இப்படி ஏதும் நடந்ததா என்று அறிய கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். 2018ல் ஆடு ஒன்று விசித்திர குட்டியை ஈன்றதாக செய்திகள் நமக்கு கிடைத்தன. ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள் இல்லை. உண்மையில் மரபணு மாறுபாடு, குறைபாடு காரணமாக ஆட்டுக்குட்டி தோல் உருவாகாமல், வெள்ளையாக, உடல் வீங்கிப்போய், பன்றி போல தோன்றம் அளிக்கும் படத்தை வெளியிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: thesun.co.uk I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, விசித்திரமான சிலிக்கான் பொம்மைகளை செய்யும் கலைஞர் ஒருவர் இந்த பொம்மையைச் செய்துள்ளார் என்று பதிவுகள் நமக்குக் கிடைத்தன. அதன் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். Laira Maganuco என்ற சிலிக்கானில் பொம்மைகள் செய்யும் கலைஞர் இந்த பொம்மையை உருவாக்கியிருப்பது தெரிந்தது. இந்த பாதி மனிதன் – பாதி பன்றி குட்டி பொம்மையை அவர் தன்னுடைய இணையதளத்தில் விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: etsy.com I Archive
இந்த பொம்மையின் படங்களை அவர் 2018ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “சிலிக்கானில் செய்யப்பட்ட இரு இனங்கள் கலந்த (ஹைபிரிட்) பன்றிக் குட்டி “ என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய ஃபேஸ்புக் பக்கம் மற்றும் இணையதளத்தை பார்த்த போது, இதே போன்று ஏராளமான வித்தியாசமான பொம்மைகளை அவர் உருவாக்கி, விற்பனை செய்து வருவது தெரிந்தது.
இவருடைய பொம்மைகளை உண்மை என்று நினைத்து இதற்கு முன்பும் கூட பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளன. கேரளாவில் சிக்கிய அதிசய வேற்றுகிரக உயிரினம் என்று முன்பு வதந்தி பரவியது. அந்தக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில், 2018ல் வெளியான செய்தியை தற்போது நடந்தது போல, இத்தாலி கலைஞர் ஒருவர் உருவாக்கிய சிலிக்கான் பொம்மையை வைத்து தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சிலிக்கானில் செய்யப்பட்ட பன்றி பொம்மையை வைத்து பிலிப்பைன்சில் ஆட்டுக்கு மனித – பன்றி கலப்பு குழந்தை பிறந்தது என்று தவறான தகவலை பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாதி மனிதன், பாதி பன்றியாக பிறந்த விசித்திர குட்டி என்று பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
