பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டரில் அணிவகுத்து வந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நெடுஞ்சாலையில் வாிசையாக நிற்கும் டிராக்டர்களின் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 16ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், "பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டிராக்டரில் அணிவகுத்து வரும் பஞ்சாப் விவசாயிகள் என்று சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் தங்கிப் போராட தயார் நிலையில் டிரைலர் (Trailer) வாகனத்துடன் வருகின்றனர். ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அப்படி எதையும் காண முடியவில்லை. மேலும் டிராக்டரும் நம் இந்தியாவில் உள்ளது போல இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த மாதம் (பிப்ரவரி 2024) தொடக்கத்தில் ஐரோப்பா முழுக்க விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் வீடியோ இது என்பது தெரியவந்தது. பலரும் இந்த வீடியோவை பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டிருந்தனர். சில எக்ஸ் தள பதிவுகளில் ஸ்பெயின் – பிரான்ஸ் எல்லை பகுதியை முற்றுகையிட்ட ஸ்பெயின் விவசாயிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ஒரு டிராக்டரின் பின்னால் உள்ள டிரைலர் வண்டியில் பேனர் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது இந்தி, பஞ்சாபி மொழியில் இல்லை. ஆங்கில எழுத்துக்கள் ஆக இருந்தாலும் அது ஆங்கிலமும் இல்லை. புரியாத மொழியில் ஏன் பஞ்சாப் விவசாயிகள் பேனர் கட்டி வர வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அது தொடர்பாக தேடினோம்.

Archive

அந்த பேனரில், "VOSALTRES POLITIKS BER ASSENTATS I NOSALTRES BEN OFEGATS!!" என்று இருந்தது. ஸ்பெயினில் விவசாயிகள் போராட்டம் என்று செய்தி கிடைத்ததால், இது ஸ்பானிஷ் மொழியா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். கூகுள் டிரான்ஸ்லேட்டரில் தேடிய போது அது ஸ்பானிஷ் இல்லை என்று தெரியவந்தது. அதே நேரத்தில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பேசப்படும் ஒரு மொழியான காடலன் (Catalan) என்ற மொழியில் அது எழுதப்பட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ ஸ்பெயின் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

நாம் மேற்கொண்ட ஆய்வில், பிப்ரவரி முதல் வாரத்தில் ஸ்பெயினில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதும், விவசாயிகள் டிராக்டரில் அணிவகுத்துச் சென்றனர் என்று எக்ஸ் தளத்தில் வெளியான பதிவுகள் நமக்குக் கிடைத்துள்ளன. மேலும், வீடியோவில் ஒரு வாகனத்தில் ஸ்பெயின் நாட்டில் பேசப்படும் ஒரு மொழியான காடலனில் பேனர் வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்த வீடியோ டெல்லி நோக்கி செல்லும் பஞ்சாப் விவசாயிகளுடையது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஸ்பெயினில் நடந்து வரும் விவசாயிகள் போராட்ட வீடியோவை பஞ்சாப் விவசாயிகள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டாில் வந்த வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian

Result: False