இந்தி பேசும் நபர் கோதுமை மாவு பிசையும் காட்சி என்று பரவும் இந்தோனேஷியா வீடியோ!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

இந்திக்காரர் கடைசியில் கோதுமை மாவு பிசையும் முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உள்ளாடை மட்டும் அணிந்த நபர், கூடையில் இருக்கும் ஏதோ ஒரு பயிறு வகையை மிதித்து கழுவுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் தன்னுடைய உள்ளாடைக்குள் தண்ணீர் ஊற்ற, அது அந்த கூடைக்குள் இருந்த பயிறுக்குள்ளும் செல்கிறது. நிலைத் தகவலில், “ஹிந்திக்காரன் கடையில் கோதுமை மாவு பிசையும் முறை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Pollachi Sairam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை நூற்றுக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் உள்ள நபரைப் பார்க்கும் போது வட இந்தியர் போல இல்லை. மேலும், அவர்கள் பேசும் மொழி இந்தி போலவும் இல்லை. வித்தியாசமாக இருந்தது. அவர் கோதுமை மாவை பிசையவும் இல்லை. பட்டாணி போன்று ஏதோ ஒன்றை அவர் மிதிப்பது போல உள்ளது. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2021 டிசம்பரில் இந்தோனேஷியாவில் வைரலாக பகிரப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. மேலும், இது தொடர்பாக இந்தோனேஷிய மொழியில் பல செய்திகள் வெளியாகி இருந்தன. அவற்றைப் பார்த்தோம். 

சோயா பீன்ஸை சுத்தம் செய்வதற்காக கூடைக்குள் போட்டு மிதித்த நபர். உள்ளாடைக்குள்ளும் தண்ணீர் விட்ட அந்த நபரின் செயல்பாட்டால் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்தோனேஷியாவில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று எந்த தகவலும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், அந்த நபர் தன்னுடைய உள்ளாடைக்குள் தண்ணீர் விட்டதாலோ, அந்த தண்ணீர் சோயா பீன்ஸ் கூடைக்குள் சென்றதாலே அதிர்ச்சி அடைய வேண்டாம். ஏனெனில் சோயா பீன்ஸ் பயன்படுத்தி செய்யப்படும் tempe or tempeh என்ற உணவுப் பொருள் தயாரிக்க நீண்ட செயல்முறை உள்ளது. வீடியோவில் பார்ப்பது போல நன்கு தண்ணீர் விட்டு சோயா சுத்தம் செய்ய வேண்டும். அரை மணி நேரம் வேக வைத்து, இரவு முழுவதும் ஊற விட வேண்டும். அதன் பிறகு தோல் நீக்கி மீண்டும் சுத்தம் செய்ய வெண்டும். தோல் நீக்கிய சோயாவை மீண்டும் வேக வைக்க வேண்டும் என்று tempe தயாரிக்கும் முறையைக் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: tribunnews.com I Archive I tribunnews.com I Archive 2

tempe சோயா தயாரிக்கும் முறை தொடர்பாகத் தொடர்ந்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று பெரிய பெரிய கேன்களில் சோயாவை ஊற வைத்து சுத்தம் செய்து, தயாரிப்பது தெரிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: sindonews.com I Archive

நம்முடைய ஆய்வில், உள்ளாடை மட்டும் அணிந்து கூடைக்குள் நிற்கும் நபர் கோதுமை மாவை பிசையவில்லை, சோயாவை சுத்தம் செய்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது என்று அந்நாட்டில் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேஷிய உணவு வகையான tempeh இப்படித்தான் தயாரிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்தி மொழி பேசும் நபரின் கடைசியில் கோதுமை மாவு பிசையப்படுகிறது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

இந்தோனேஷியாவில் 2021ம் ஆண்டு டிசம்பரில் வைரல் ஆன சோயா பீன்ஸை மிதித்து சுத்தம் செய்யும் வீடியோவை எடுத்து, வட இந்தியர் கடையில் கோதுமை மாவு பிசையும் காட்சி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தி பேசும் நபர் கோதுமை மாவு பிசையும் காட்சி என்று பரவும் இந்தோனேஷியா வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False