காஸாவில் தண்ணீர் தொட்டியில் குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசி எரித்துக் கொன்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மிகப்பெரிய டேங்கர்கள் மீது மேலே இருந்து குண்டு போடப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கீழே இருந்தவர்கள் தீப்பிடித்து சிதறி ஓடுகின்றனர். நிலைத் தகவலில், "இதை விட இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தனத்தை எப்படி வர்ணிக்கலாம்.

கிழக்கு காசாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் குடிநீரைப் பெறுவதற்காகக் குழந்தைகள் குழு ஒன்று கூடுகிறது, ஆக்கிரமிப்பு இஸ்ரேலியர்கள் அவர்கள்மீது குண்டு எரிந்து கொலை செய்து வீடியோ எடுத்த போது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2023 அக்டோபர் 23ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவின் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தண்ணீர் பிடிக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

தண்ணீர் எடுக்கச் சென்ற குழந்தைகள் மீது குண்டு வீசி இஸ்ரேல் கொலை செய்ததாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். இஸ்ரேல் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலரும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தண்ணீர் தொட்டி மீது குண்டு வீசியதில் குழந்தைகள் உயிரிழந்தாக செய்திகள் கிடைக்கவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் மிகப் பெரிய டேங்கர்கள் காட்டப்படுகிறது. பார்க்க தண்ணீர் டேங்கு போல இல்லை. பெட்ரோல் - டீசல் டேங்கு போல உள்ளது. மேலும் கீழே உள்ளவர்கள் குழந்தைகளா, பெரியவர்களா என்பதும் தெரியவில்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அக்டோபர் 12ம் தேதி அல்ஜசிரா ஊடகத்தின் அரபு ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், சூடானில் ரேப்பிட் சப்போர்ட் ஃபோர்ஸை சேர்ந்தவர்கள் எரிபொருள் நிரப்ப வந்த போது அவர்கள் மீது சூடான் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

அதே போன்று Sudan News என்ற எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் கூட சூடான் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதல் என்றே குறிப்பிடப்பட்டிருந்ததா. வேறு சிலரும் சூடான் ராணுவம் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை 2023 அக்டோபர் 13ம் தேதி பதிவிட்டிருந்தனர்.

Archive

நம்முடைய ஆய்வில் தண்ணீர் எடுக்கச் சென்ற குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்ஜசீரா உள்ளிட்ட ஊடகங்கள் இந்த வீடியோ சூடானைச் சார்ந்தது என்று செய்தி வெளியிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சூடானில் சூடான் ராணுவம் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False