இரண்டே நிமிடத்தில் பல் வெள்ளையாகுமா? – வைரல் வீடியோ

சமூக ஊடகம் மருத்துவம் I Medical

‘’இரண்டே நிமிடத்தில் கறை படிந்த பற்கள் வெள்ளையாக பளபளப்பாகிவிடும்,’’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

2 நிமிடங்களில் கறை படிந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக பளபளப்பாக்கி விடும்

Archived link

மஞ்சள் கறை படிந்த பற்கள், அதற்கு கீழே வெண்மையான பளீச் பற்கள் ஆகிய புகைப்படங்களை ஒன்றாக இணைத்துக் காட்டியுள்ளனர். பக்கத்தில், உப்பு, இஞ்சியை வைத்துள்ளனர். 2 நிமிடத்தில் கறை படிந்த மஞ்சள் பற்கள் வெள்ளையாக பளபளப்பாக மாறிவிடும் என்று தலைப்பிட்டுள்ளனர். இஞ்சி, எலுமிச்சை, உப்பு கலவையை பல்லில் தேய்த்தால் பற்கள் வெண்மையாகும் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.  இயற்கை வைத்தியக் குறிப்பு என்று நம்பி, இந்த வீடியோவை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

வெற்றிலை, புகையிலைப் பழக்கத்தால் பற்களில் அடர் கறை பிடிக்கும். இவர்கள் கூட இந்த மருத்துவக் குறிப்பை பயன்படுத்தி பலன் பெறலாம், இதன் மூலம் தங்கள் கேர்ல் ஃபிரெண்ட், பாய் ஃபிரெண்டுடன் சகஜமாக பழகலாம் என்று முன்னுரையுடன் தொடங்கியது வீடியோ.

ஒரு இன்ச் அளவுக்கு இஞ்சியை எடுத்து அதில் உள்ள தோல் பகுதியை மட்டும் சீவி எடுக்கின்றனர். அதில், ஒரு டீஸ்பூன் இந்துப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்கின்றனர். இதை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தினால் பற்கள் வெண்மையாகும் என்று சொல்லியுள்ளனர். ஆனால், வீடியோ பதிவின் தலைப்பில் இரண்டு நிமிடத்தில் பளிச் என மாறும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோ, பார்ப்பவர்களை தவறாக வழிநடத்தும் வகையில், தலைப்பு இருந்தது தெரியவந்தது.

இஞ்சி, இந்துப்பு, எலுமிச்சை மருத்துவ குணங்கள் நிறைந்ததுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பற்களை வெண்மையாக்கும் தன்மை இதற்கு உண்டா என்று தெரிந்துகொள்ள முடிவு செய்தோம். இஞ்சி, இந்துப்பு, எலுமிச்சை கலவை பற்களை வெண்மையாக்க உதவும் என்று ஏதேனும் ஆய்வு, மருத்துவக் குறிப்பு உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை.

இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி படித்துப் பார்த்தோம். ஈறு பிரச்னைகளைப் போக்கும் குணம் இஞ்சிக்கு உண்டு என்று தெரிந்தது. மிகச்சிறந்த ஆன்டி பாக்டீரியல் என்ஸைம் கொண்டுள்ளதால் கிருமிக்கு எதிராக செயல்படும். தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், ஈறுகளை வலிமைப்படுத்தும், பற்சிதைவு ஏற்படுவதை தடுக்கும். ஆனால், பற்களை வெண்மையாக்கும் என்று எந்த ஒரு மருத்துவ ஆய்வும் இல்லை. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

எலுமிச்சை சாரு பற்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றது மற்றொரு செய்தி. பல்லில் உள்ள கால்ஷியத்தை வௌயேற்றும் தன்மைகொண்டது என்றும், கால்ஷியம் வெளியேறிவிட்டால் மீண்டும் அதை சரி செய்ய முடியாது என்றும் எச்சரித்தது அந்த செய்தி. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

வீட்டு வைத்திய குறிப்பு என்பதால், இந்த வீடியோவை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பிரிவு உதவி பேராசிரியர் டாக்டர் தீபாவுக்கு அனுப்பி, அவருடைய கருத்தைக் கேட்டோம். “இஞ்சி, உப்பு, எலுமிச்சை சேர்த்துத் தடவும்போதும் பல்லின் சென்ஸிடிவிட்டி அதிகரிக்கும். பல்லின் மேல் உள்ள எனாமல் கரைய ஆரம்பிக்கும். இந்த மூன்றும் அமிலத் தன்மை கொண்டது. இதை தொடர்ந்து பயன்படுத்தினால், பல்லின் எனாமல் முற்றிலும் கரைந்து, பல் கூச்சம் அதிகரித்துவிடும். எனவே, இதை யாரும் முயன்று பார்க்க வேண்டாம்” என்றார்.

(டாக்டர் தீபாவுடனான உரையாடல் ஆதாரத்துக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.)

படம்: டாக்டர் தீபா

எலுமிச்சை சாறு, உப்பு பற்களில் ஏற்படுத்தும் மாற்றம் குறித்து சென்னை டி.நகரில் உள்ள எம்.எஸ்.ஆர்.டெண்டல் மருத்துவமனையின் மூத்த பல் மருத்துவர் எம்.எஸ்.ரவியிடம் கேட்டபோது, “இது முற்றிலும் தவறானது. எலுமிச்சை சாரு பல்லில் உள்ள எனாமலை சிதைத்துவிடும். டேபிள் சால்டை ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்ய பயன்படுத்த பரிந்துரைப்போம். ஆனால், அதை பற்கள் மேல் பயன்படுத்த சொல்வது இல்லை. இஞ்சியால் பற்கள் வெண்மையாகும் என்பதற்கு எந்த மருத்துவ ஆய்வும் இல்லை. அனைத்துக்கும் மேலாக, பதிவில் கறை படிந்த பல், வெண்மையாக மாறிவிட்டது போல் காட்டியுள்ளனர். இது இரண்டு வெவ்வேறு நபர்களின் பல். இந்த படமே தவறாக புரிந்துகொள்ளும் வழிநடத்தும் வகையில் உள்ளது” என்றார்.

(டாக்டர் எம்.எஸ்.ரவி உடனான உரையாடல், ஆதாரத்துக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.)

படம்: டாக்டர் எம்.எஸ்.ரவி

இந்த வீடியோவுக்கு என்ன மாதிரியான கமெண்ட் வந்துள்ளது என்று பார்த்தோம். பலரும். இதில் கூறப்படும் முறையை செய்து பார்த்தும் பலனில்லை என்று தெரிவித்திருந்தனர். சிலர், வீடியோ அருமை என்று சொல்லியிருந்தனர்.

வீடியோவை வெளியிட்ட நலமுடன் வாழ பக்கம் சென்று அதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள முயன்றோம். பக்கத்துக்குள் நுழைந்ததுமே “நான் போடுற வீடியோ பிடித்திருந்தால், வீடியோவை 10 குரூப்பில் ஷேர் செய்துவிட்டு வாங்க” என்று மெசெஞ்சர் ஓப்பன் ஆனது.

குழுவைப் பற்றி எந்த தகவலும் இல்லை. மருத்துவ இதழ்களில் பயன்படுத்துவது போன்ற பொதுவான மருத்துவ எச்சரிக்கை அறிக்கை மட்டுமே இருந்தது. பலரும் வெளியிடும் மருத்துவ குறிப்புகளை இவர்கள் எடுத்து மறுபதிவு செய்வதும் தெரிந்தது. அந்த வகையில், தமிழ் ஹெல்த் அன்ட் பியூட்டி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான வீடியோவை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் ஹெல்த் அன்ட் பியூட்டி பக்கத்துக்கு சென்றோம். முழுக்க முழுக்க மூலிகை – மருத்துவக் குறிப்புகளாக இருந்தன. ஆனால், பெரும்பாலான வீடியோக்கள் உடனே பிரச்னை சரியாகிவிடும் என்ற வகையில் இருந்தன. இரண்டே நிமிடத்தில் உடல் எடையைக் குறைக்கலாம், பற்களை வெண்மையாக்கலாம் என்பது போன்று பல வீடியோக்கள் இருந்தன. இதனால், இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருந்தது.

Archived link

ஆய்வு முடிவுகள், மருத்துவர்களின் பேட்டி அடிப்படையில், இஞ்சி தோல், இந்துப்பு, எலுமிச்சை சாறு கலவை பற்களை இரண்டே நிமிடத்தில் பளிச் என மாற்றும் என்ற வீடியோ தவறானது, பற்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, கறை படிந்த மஞ்சள் பற்களை இரண்டே நிமிடத்தில் பளிச்சென மாற்றலாம் என்ற வீடியோ தவறானது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:இரண்டே நிமிடத்தில் பல் வெள்ளையாகுமா? – வைரல் வீடியோ

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •