
அசைவ உணவு உண்பவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அயோக்கியர்கள்தான் அசைவம் உண்பார்கள். சைவ உணவு உண்பவர்கள் அன்பானவர்கள், நல் ஒழுக்கம் உடையவர்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் அனைவரும் அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள். நான் காட்டுமிராண்டி அல்ல. அன்பானவன் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை
தேனிகாரன் (@Karthikbalan84) என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 24ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கிலும் இந்த நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். வடை மாஸ்டர் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 25ம் தேதி இதை பதிவிட்டிருந்தார். நிலைத் தகவலில், “ஏம்பா இந்த நாயோட வாயை யாராவது. தைச்சு விடுங்கப்பா தாங்க முடியல எதையாவது உளறிட்டே இருக்கான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
அசைவம் சாப்பிடுபவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று அண்ணாமலை விமர்சித்ததாக சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அவர் அப்படி கூறியதாக எந்த ஒரு அச்சு, காட்சி, இணைய ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. உண்மையில் அண்ணாமலை அவ்வாறு கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும்.
மேலும், இந்த நியூஸ் கார்டும் உண்மையானது போல இல்லை. வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போன்று தமிழ் ஃபாண்ட் மற்றும் டிசைன் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் பலரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதை கூறினார் என்று கருதிக்கொண்டு மிக மோசமாக விமர்சித்து வரவே, இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் தந்தி டிவி 2023 மார்ச் 24ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருப்பது கிடைத்தது. ஆனால் அதில், “சட்டத்தின் அடிப்படையில் ராகுல் மீது நடவடிக்கை. தூத்துக்குடியில், ராகுல் காந்தியின் பதவி நீக்கம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான தகவலைப் பரப்பியிருப்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது பற்றிக் கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அசைவம் சாப்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அசைவ உணவு சாப்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
