
இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகளை உயிருடன் ஆசிட் தொட்டியில் இறக்கி கொலை செய்கிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கைதி ஒருவரை அபாயம் என்று எழுதப்பட்டுள்ள தொட்டி ஒன்றுக்குள் இறக்கி, எலும்புக் கூடாக மாறிய பிறகு அவரை வெளியே எடுக்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் நாட்டில் சிறையில் இருக்கும் தீவிர வாதிக்கு வழங்கப்படும் தண்டனை. (உயுரு டன் ஆசிட் டேங்க் உள்ளே இறக்கி எலும்புக் கூடாக வெளியே எடுக்கும் காட்சி இது போல் எல்லா தீவிர வாதிக்கும் தண்டனை வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் சிறையில் பயங்கரவாதிகளை அமிலத் தொட்டியில் இறக்கி கொலை செய்கிறார்கள் என்று பலரும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆசிட் தொட்டியில் உயிருடன் ஒருவரை இறக்குகின்றனர். அவர் எலும்புக் கூடாக வெளியே வருவது போல் வீடியோ உள்ளது.
உண்மையில் ஆசிட் தொட்டியில் இறக்கியிருந்தால் எலும்பு கூட மிஞ்சாது. அப்படியே எலும்பு மட்டும் உருகாமல் இருந்திருந்தாலும் கூட இணைப்புகள் எல்லாம் அரிக்கப்பட்டுக் குவியலாக விழுந்திருக்கும். ஆய்வுக் கூடங்களில் வைக்கப்பட்டிருக்கும் எலும்புக் கூடு போல முழு உடல் எலும்புக்கூடாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, இது திரைப்பட காட்சியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகள் கொலை செய்யப்படும் காட்சி என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். இவற்றுக்கு இடையே தாய்லாந்து நாட்டில் ஹாலிவுட் சண்டைக் காட்சி என்று குறிப்பிட்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருக்கும் இடத்தில் எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன.
அவற்றைப் பார்த்த போது, வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் வீடியோ இது என்பது தெரியவந்தது. கைதி ஒருவரை அடித்து ஆசிட் தொட்டிக்குள் இறக்கி, எலும்பு கூடாக அவரை வெளியே எடுப்பது போன்று தினமும் அங்கு ஸ்டண்ட் ஷோ நடப்பது தெரிந்தது. 2012ம் ஆண்டில் பதிவிடப்பட்ட யூடியூப் வீடியோ நமக்குக் கிடைத்தது. அதிலும் அதே காட்சி இருந்தது. இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடி அந்த தீம் பார்க்கின் இணையதளத்தைக் கண்டுபிடித்தோம்.
அதில், ஹாலிவுட் ஆக்ஷன் ஷோ என்று குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தனர். தொழில்முறை சண்டைப் பயிற்சி கலைஞர்களால் நிகழ்த்தப்படும் ஹாலிவுட் சண்டைக் காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சண்டைக் காட்சி நடைபெறும் இடத்தின் கூகுள் ஸ்ட்ரீட் காட்சியையும் தேடி எடுத்தோம். ஒரு பக்கம் ரசிகர்கள் அமர அரங்கமும், எதிர் புறத்தில் சண்டை நடக்கும் இடத்தின் செட்டும் அமைக்கப்பட்டிருந்தது.
இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ இஸ்ரேல் சிறையில் பயங்கரவாதிகள் கொலை செய்யப்படும் காட்சி என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன. தாய்லாந்து தீம் பார்க்கின் வீடியோவை எடுத்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தாய்லாந்து தீம் பார்க் ஸ்டண்ட் காட்சி வீடியோவை இஸ்ரேல் சிறையில் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:இஸ்ரேல் சிறையில் தீவிரவாதியை உயிருடன் ஆசிட் தொட்டியில் தள்ளும் காட்சி இதுவா?
Written By: Chendur PandianResult: False
