தட்டேந்தி நிம்மி என்ற ஹேஷ்டெக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது என்று தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், "தேசிய அளவில் ட்ரெண்டாகும் ஹேஸ் டேக். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியலில் போடாதீர்கள். கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுங்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்த நிலையில் X தளத்தில் #தட்டேந்தி_நிம்மி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது ஃபேஸ்புக், எக்ஸ் தளம் (ட்விட்டர்) என அனைத்து சமூக ஊடகங்களிலும் 2023 டிசம்பர் 27ம் தேதி பகிரப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிகள், அவரது பேச்சுக்களை வைத்து சமூக ஊடகங்களில் உண்மையும் பொய்யும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சென்ற அவர் காணிக்கையை உண்டியலில் போடாதீர்கள் என்று பேசியதை வைத்து பல பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை வைத்து தட்டேந்தி நிம்மி என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுப் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த தட்டேந்தி நிம்மி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முதலில் தந்தி டிவி-யின் ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. ராமநாதபுரத்தில் சாலை ஒன்றுக்கு நிர்மலா சீதாராமன் பெயர் வைக்கப்பட்டிருந்தது தொடர்பான நியூஸ் கார்டு தான் கிடைத்தது. எனவே, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இதை தந்தி டிவி-தான் வெளியிட்டதா என்று கேட்டோம். அவர், "இது போலியானது... தந்தி டிவி இதை வெளியிடவில்லை" என்றார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தட்டேந்தி நிம்மி என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது என்று தந்தி டிவி பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நிர்மலா சீதாராமனை நக்கல் செய்யும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது என்று தந்தி டிவி வெளியிட்டது போன்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘தட்டேந்தி நிம்மி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் என்று தந்தி டிவி செய்தி வௌியிட்டதா?

Written By: Chendur Pandian

Result: False