திருவாரூரில் மீத்தேன் குழாய் வெடித்ததாக பரவும் புகைப்படம்!

சமூக ஊடகம் சமூகம்

திருவாரூரில் மீத்தேன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தீவிபத்து படங்கள் சில சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவை திருவாரூரில் நடந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

GAIL 2.png
Facebook LinkArchived Link

“திருவாரூரில் மீத்தேன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. லைக் வேண்டாம், ஷேர் பண்ணி எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே” என்ற நிலைத்தகவலுடன் நான்கு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. முதல் படத்தில் பள்ளத்தில் குழாய் உள்ளது. அதைப் பலரும் பார்வையிடுகின்றனர். இரண்டாவது படத்தில், தீக் காயத்தால் பாதிக்கப்பட்ட பசு ஒன்றுக்கு தண்ணீர் அளிக்கப்படுகிறது. தென்னந்தோப்பே தீக்கிரையான படம் மூன்றாவதாக உள்ளது. தீக்காயத்தால் கைகளில் ஏற்பட்ட காயத்தை நான்காவது படத்தில் காட்டியுள்ளனர்.

இந்த பதிவை, கோபால கிருஷ்ணன் என்பவர் 2017 டிசம்பர் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். ஒரு லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த பதிவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

உண்மை அறிவோம்:

தஞ்சை, நாகை, திருவாரூர் காவிரி டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்கவும் இதற்காக குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்தும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் பகுதியில் மீத்தேன் குழாய் வெடித்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் எதுவும் வந்தது இல்லை. ஆனால், இந்த சம்பவம் திருவாரூரில் நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் எந்த பகுதியில், எப்போது நடந்தது என்ற தகவல் இல்லை. ஆனால், ஆந்திராவில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்ட செய்தி நினைவில் உள்ளது.இந்த படங்களை ஆய்வு செய்தோம். முதல் படத்தைப் பார்த்தபோது அதில் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு இருப்பது தெரிந்தது. எனவே, ஆந்திராவில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிவிபத்தை திருவாரூரில் நடந்ததாக பதிவிட்டிருக்கலாம் என்று தோன்றியது.

GAIL 3.png

இதை உறுதி செய்யப் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நிகழ்ந்த கெயில் எரிவாயு குழாய் வெடிப்பின்போது எடுத்த படம் என்று குறிப்பிட்டு சில பிளாக் பதிவுகள் கிடைத்தன.

GAIL 4.png

தி.மு.க நிர்வாகிகளுள் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்திரபாபு நாயுடு பார்வையிடும் படத்தைப் பதிவிட்டு இருந்தார். 

தொடர்ந்து மற்றொரு பதிவில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற அனைத்து படங்களும் பகிரப்பட்டு இருந்தன. 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி அந்த பிளாக் பதிவிடப்பட்டு இருந்தது. அதில்,” ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவன எரிவாயு குழாய் வெடித்தது”  என்று படங்கள் பகிரப்பட்டு இருந்தன. ஆனால், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை.

KSRBLOGSArchived Link 1
Redhils RealEstate Agency BlogsArchived Link 2

இதனால், கூகுளில் கிழக்கு கோதாவரி கெயில் எரிவாயு குழாய் வெடிப்பு என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்த சம்பவம் தொடர்பான முழு தகவலும் நமக்கு கிடைத்தது.

2014ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக செய்திகள் பதிவாகி இருந்தன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக சென்ற கெயில் எரிவாயு குழாய் வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து தேடியபோது மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படங்கள் அனைத்தும் கிழக்கு கோதாவரி குழாய் வெடிப்பு சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

India TodayArchived Link 1
Times Of IndiaArchived Link 2
Business LineArchived Link 3

நம்முடைய ஆய்வில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 2014ம் ஆண்டு நிகழ்ந்த கெயில் எரிவாயு குழாய் வெடிப்பு புகைப்படங்களை திருவாரூரில் நடந்தது என்று தவறாக பதிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருவாரூரில் மீத்தேன் குழாய் வெடித்ததாக பரவும் புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “திருவாரூரில் மீத்தேன் குழாய் வெடித்ததாக பரவும் புகைப்படம்!

Comments are closed.