
நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட எந்த ஒரு தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்கத் தேவையில்லை என்று நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு. நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட எந்த தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்கத் தேவையில்லை. நாடாளுமன்ற விதிகளில் விரைவில் வருகிறது மாற்றம். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை, Mohamed Basith என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 9ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் கூட அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பதில் அளிக்க வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்றம் வந்து பதில் அளிக்கத் தேவையில்லை என்ற நிலையை உருவாக்க பாஜக திட்டமிடுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. இந்த நியூஸ் கார்டு பார்க்க தந்தி டிவி வெளியிட்டது போல இருந்தாலும், அதன் பின்னணி டிசைன், தமிழ் ஃபாண்ட் போன்றவற்றில் வித்தியாசத்தைக் காண முடிந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் பதில் அளிக்கத் தேவையில்லை என்ற திருத்தத்தைக் கொண்டு வர உள்ளோம் என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கிறார் என்று ராஜ்நாத் சிங் கூறியதாக செய்தி நமக்கு கிடைத்தது.
இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஆகஸ்ட் 9, 2023 அன்று தந்தி டி.வி இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை. சற்று பின்னோக்கி பார்த்த போது ஜூலை 1, 2023 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

ஆனால் அதில், “மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை.20ல் தொடக்கம். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாக பகிர்ந்திருப்பது தெரிந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய, அதை தந்தி டிவி டிஜிட்டல் – சமூக ஊடகப் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்காமல் இருக்க நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு அளிக்கும் வகையில் நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு என்று பரவும் செய்தி உண்மையா?
Written By: Chendur PandianResult: False
