
தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று நடிகர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் விஜய் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது – நடிகர் விஜய்” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை Kalaimani Raja என்பவர் 2021 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பரவியது. ஆனால், ரஜினி அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது, அதே போன்ற ஒரு நியூஸ் கார்டில் ரஜினி படத்துக்கு பதில் விஜய் படத்தை வைத்து, நடிகர் விஜய் கூறியதாக பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

2021 ஏப்ரல் 4ம் தேதி இந்த நியூஸ் கார்டு வெளியானதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, முதலில் பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்ய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில் விஜய் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டையும் பாலிமர் தொலைக்காட்சி வெளியிடவில்லை என்பது தெரிந்தது. மேலும் பாலிமர் தொலைக்காட்சி தற்போது இந்த டிசைனில் நியூஸ் கார்டுகளை வெளியிடுவது இல்லை என்பதும் தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டு போலியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்வதற்காக பாலிமர் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி அருணைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானதுதான் என்று உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் விஜய் 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு எதையாவது வெளியிட்டுள்ளாரா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அவருடைய சமூக ஊடக பக்கங்களில் ஏதும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். விஜய் பெயரில் வெரிஃபைடு பக்கம் ஒன்று உள்ளது. அது 2020 ஜனவரி 27ம் தேதி கடைசியாக அப்டேட் செய்யப்பட்டு இருந்தது. வேறு எந்த பதிவும் நமக்குக் கிடைக்கவில்லை.
இந்த நியூஸ் கார்டு போலியானது என்று பாலிமர் தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் இப்படி கூறியதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வரும் சூழலில், இதுவும் போலியானதுதான் என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாக பரவும் பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாக பரவும் போலிச் செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False
