
உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அறிவித்தது என்று ஒரு சான்றிதழ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார்.
நாடார் சமூகத்துக்கு யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியது போன்று புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஐ.நா வின் பாரம்பரிய மற்றும் தொல்பொருள் துறை அமைப்பான யுனெஸ்கோ நடத்திய ஆய்வில் உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நம் நாடார் இனம் தேர்வு. நாடார் குலம் முதல் இடம் பிடித்தது.
உலகில் உள்ள 3 லட்சத்துக்கும் மேலான ஜாதி, இன, குழுக்களை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். முதல் 10 இடங்களில் இந்தியாவிலுள்ள வேறெந்த ஜாதியும் இடம் பெறவில்லை.
நம்பிக்கை, நாணயம், உழைப்பு, பிறர்க்கு உதவுதல், தொன்மை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், பாசம், வீரம் முதலியவற்றில் உலகுக்கே முன்னோடி என புகழாரம்” என்று கூறப்பட்டுள்ளது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதை பதிவை சமூக ஊடகங்களில் வேறு யாரேனும் பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்தோம். அப்போது நாடார் ஒற்றுமை இயக்கம்..♪ நாடார் இளைஞர் படை தமிழகம் முழுவதும் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Kumar Sankar என்பவர் 2020 அக்டோபர் 31ம் தேதி பகிர்ந்திருப்பது தெரிந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
இந்தியாவின் தேசிய கீதத்தை உலகின் சிறந்த தேசிய கீதம் என்று யுனெஸ்கோ அறிவித்தது, தென்னிந்தியாவின் காலை உணவான இட்லியை உலகின் மிகச் சிறந்த காலை உணவு என யுனெஸ்கோ அறிவித்தது என்று சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் அளிப்பது இல்லை.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் நாடார் சமுதாயத்துக்கு யுனெஸ்கோ சான்றிதழ் அளித்தது போன்று வெளியிட்டுள்ளனர். இந்த சான்றிதழை யுனெஸ்கோ எப்போது, யாருக்கு அளித்தது என்று எந்த ஒரு தகவலும் இல்லை.
உண்மையில் யுனெஸ்கோ உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனம் தொடர்பாக ஆய்வு முடிவு ஏதும் வெளியிட்டுள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. யுனெஸ்கோ இணையதளத்தில் தொன்மையான மற்றும் நம்பகமான இனம் தொடர்பாக ஆய்வு கட்டுரை ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதம்தான் உலகின் அமைதியான மதம் என்று யுனெஸ்கோ அறிவித்தது என்று வதந்தி பரவியது. அப்போது “இது போன்று எந்த ஒரு அறிவிப்பையும் யுனெஸ்கோ வெளியிடுவது இல்லை” என்று விளக்கம் அளித்திருந்தது. மேலும், “யுனெஸ்கோ அனைத்து மரபுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் சமமான அடிப்படையில் மரியாதையை ஊக்குவிக்கிறது, எப்போதும் அனைவருக்குமான தொடர்பை கட்டியெழுப்பவும், முடிந்தவரை உறவுகளை வலுப்படுத்தவும் முயற்சிக்கிறது” என்று கூறியிருந்தது.
அசல் பதிவைக் காண: unesco.org I Archive
அடுத்ததாக, இந்த சான்றிதழை ஆய்வு செய்தோம். இந்த சான்றிதழை பெரிதுபடுத்திப் பார்த்தோம். அதில், UNHCR என்று இருந்தது. அது என்ன அமைப்பு என்று தேடியபோது, ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான அமைப்பு என்று தெரிந்தது. அகதிகளுக்கான அமைப்பு எப்படி தொன்மையான இனம் தொடர்பான சான்றிதழை அளிக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.
பதிவில் உள்ள சான்றிதழ் படத்தை மட்டும் எடிட் செய்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அது யுனெஸ்கோ அமைப்பு கஜகஸ்தான் நாட்டின் அல்மாத்தி நகரில் உள்ள பல்கலைக் கழகத்துடனும் அகதிகளுக்கான ஐ.நா சபையின் ஹைகமிஷனும் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் என்று தெரிந்தது. கஜகஸ்தானில் இருந்து செயல்படும் யுனெஸ்கோ கிளையின் இணையதளத்தில் இந்த சான்றிதழ் படம் நமக்குக் கிடைத்தது.
அசல் பதிவைக் காண: en.unesco.kz I Archive
போட்டோஷாப் முறையில் அந்த சான்றிதழின் வடிவமைப்பையே மாற்றி, பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர் பெயர் இருந்த இடத்தில் “நாடார் – இந்தியா” என்று சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சான்றிதழிலும் யுனெஸ்கோ தளத்தில் கிடைத்த சான்றிதழிலும் 17 பிப்ரவரி 2017 என்று குறிப்பிட்டிருப்பதை தெளிவாக காண முடிந்தது. இதன் மூலம் இந்த சான்றிதழ் போலியானது என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில், குறிப்பிட்ட எந்த ஒரு சாதியையோ இனத்தையோ குறிப்பிட்டு இதுதான் உலகின் பழமையான இனம் என்று யுனெஸ்கோ அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
நாடார் சமூகத்துக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த புகைப்படத்தில் உள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சான்றிதழ் போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததா யுனெஸ்கோ?
Fact Check By: Chendur PandianResult: False
