வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தின் படம் என்று 2017ம் ஆண்டு நடந்த ஜாட் போராட்ட படம் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பெண்கள் டிராக்டர் ஓட்டி வரும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும். டெல்லி பேரணிக்கு வந்த ராஜஸ்தானி வீரம் நிறைந்த விவசாய தாய்மார்கள்... ஒரு நல்ல சமுதாயத்தை.. உருவாக்க... ஆதரவு தாரீர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை Syed Irshad Basha என்பவர் 2020 டிசம்பர் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வைத்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது 2020 டிசம்பரில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive 1 I outlookindia.com I Archive 2

இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது. அதில், ரோஹ்தக்கில் இட ஒதுக்கீடு கோரி ஜாட்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்க ஜாட் பெண்கள் சென்ற போது எடுத்த படம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் பிடிஐ தளத்தில் இந்த புகைப்படம் உள்ளதா என்று தேடினோம். அப்போது இந்த படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில் பிப்ரவரி 5, 2017 அன்று ஜாட் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் மூலம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை தற்போது டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

2017ல் நடந்த ஜாட் போராட்ட படத்தை தற்போது 2020ம் ஆண்டு டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் பேரணியுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் பேரணியில் பங்கேற்க டிராக்டரில் வந்த பெண்கள்- பழைய படம்!

Fact Check By: Chendur Pandian

Result: False