
சென்னை மின் மயானத்தின் அவல நிலை என்று இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை மின் மயானத்தில் நிகழும் அவலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bjp Ramkumar என்பவர் 2021 மே 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா 2ம் அலை காரணமாக உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்திலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், சென்னை மின் மயானத்தில் நிகழும் அவலம் என்று படம் பகிரப்பட்டு வருகிறது.
தகனத்துக்காக காத்திருக்கும் உடல்கள், அதன் அருகே காத்திருக்கும் உறவினர்களின் தோற்றம் சென்னைவாசிகள் போல இல்லை. அதே நேரத்தில் பின்னணியில் உள்ள கட்டிடத்தில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது. எனவே, இந்த படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை பல ஊடகங்களும், சமூக ஊடக பயன்பாட்டாளர்களும் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு என்று செய்தி வெளியிட்டது தெரியவந்தது. இதனால், இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிவது சிரமமாக இருந்தது. எனவே, வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம்.

அசல் பதிவைக் காண: dinakaran.com I Archive
அப்போது அவுட்லுக் இணையதளத்தில் ஏப்ரல் 22, 2021 அன்று இந்த புகைப்படம் வெளியாகி இருப்பது தெரிந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு காரணமாக காசியாபாத் ஹின்டன் நதி சுடுகாட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: outlookindia.com I Archive
இதன் அடிப்படையில் பிடிஐ போட்டோஸ் தளத்துக்குச் சென்று தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்குக் கிடைத்தது. அதில் காசியாபாத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த படம் சென்னையில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில், சென்னை மின் மயானத்தின் அவலம் என்று பகிரப்படும் படம் 2021 ஏப்ரல் 22ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சென்னை மின் மயானத்தின் முன்பு கொரோனாவில் இறந்தவர்களின் உடலை எரிக்க காத்திருக்கும் அவல நிலை என்று பகிரப்படும் படம் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மின் மயானத்தின் அவல நிலை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
