
சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் காணக்கிடைக்காத அரிய பூக்கள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சில மலர்களின் புகைப்படங்களுடன் ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்லுப்பட்டி சதுரகிரி மலையில்… 400ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூத்திடும் மஹாமேரு புஷ்பம்! பூ காணக்கிடைக்காத அரிய பூ ஆகையால் முடிந்த வரை அடுத்தவர்கள் பார்த்திட உதவுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவைப் பெண்களின் ஆசைகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 நவம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர்கள் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஏற்கனவே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இப்படி 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய பூ என்று எதுவும் இல்லை என்று அறிவியல் உலகம் கூறுவதையும் வெளியிட்டிருந்தோம். அதே போன்று மகாமேரு என்று பூ 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலையில் பூக்கிறது என்று வதந்தி பரவிய போது அது பற்றியும் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
அந்த கட்டுரைகள்:
சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு மலர் என்று பரவும் படம் உண்மையா?
400 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மகாமேரு; காதில் பூ சுற்றும் ஃபேஸ்புக் பதிவு!
400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்: உண்மை என்ன?
தற்போது, தமிழ்நாட்டில் சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர்கள் என்று சில படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே, இந்த மலர்களின் பின்னணி பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: pacsoa.org.au I Archive 1 I palmpedia.net I Archive 2
முதலில் ஈச்சமரத்தில் மலர்கள் தொங்குவது போன்று இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அது தாய்லாந்தின் ஃபிஷ்டெயில் பாம் (fishtail palm) மரத்தின் மலர் என்று தெரிந்தது. Caryota rumphiana, Caryota mitis என்று இந்த பனையில் பல வகைகள் இருப்பது தெரிந்தது. இந்த மலர்கள் மிகவும் அரிதாகப் பூக்கக் கூடியதா என்று பார்த்தோம். ஆண்டுக்கு எத்தனை முறை பூக்கக் கூடியது என்று தேடிப் பார்த்த போது சரியான தகவல் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் இந்த மரம் வளர ஆரம்பித்த 2 முதல் மூன்று ஆண்டுகளில் பூக்க ஆரம்பித்துவிடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மரத்திலிருந்து வரும் தண்டிலிருந்து பூக்கள் குதிரை வால் போல நீண்டு வளரும் என்று குறிப்பிட்டிருந்தனர். ஒரு மரத்தில் ஒரே ஒரு தண்டு இருந்தால் பூத்ததும் அந்த மரம் இறந்துவிடும். அதுவே, பல தண்டுகள் இருந்தால் புது தண்டு வர வரப் பூத்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த பூ 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை வளரக் கூடியது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: orchidweb.com I Archive 1 I orchid-care-tips.com I Archive 2
அடுத்ததாக அடர் ஊதா நிற பூ புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அதன் பெயர் நீல நிற Vanda coerulea supra என்று தகவல் கிடைத்தது. இந்த மலர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக் கூடியது என்று பார்த்தோம். அப்போது, ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர்காலங்களில் இது பூக்கிறது என்று தகவல் கிடைத்தது. அதாவது குளிர் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் சாதாரணமாகக் காணக் கூடியது என்பது தெரிந்தது. இதன் மூலம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர்களின் படமா இது?
Fact Check By: Chendur PandianResult: False
