
மத்தியப் பிரதேச அரசு கட்டிய நவீன தானிய சேமிப்புக் கிடங்கின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் மழையால் சேதம் அடைந்த படத்தின் மீது, “இத்தனை ஆண்டுகளாக ஆண்டவர்கள் வைத்திருந்த சேமிப்புக் கிடங்கு” என்றும், நவீன சேமிப்பு கிடங்கு படத்தின் மீது “மத்ய பிரதேஷ் பிஜேபி அரசு தற்போது கட்டியுள்ள நவீன தானியக் கிடங்கு” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Kottai KrishnaRaj Reddy என்பவர் 2021 ஜூலை 8 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு சரியாக இல்லை என்பது உண்மைதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணாவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்த காலத்தில் மட்டும் 1550 டன் உணவு தானியங்கள் ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சேமிப்புக் கிடங்குகளில் வீணானதாக மத்திய அரசே கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் அம்மாநில அரசு உணவு தானியங்களை சேமிக்க நவீன சேமிப்பு கிடங்குகளை அமைத்துள்ளது என்று படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். இந்த சேமிப்பு கிடங்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடவில்லை. எனவே, இந்த தகவல் உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த உணவு தானிய சேமிப்பு கிடங்கு ரஷ்யாவில் உள்ளது என்று சில செய்திகள் கிடைத்தன. ஆனால், ரஷ்யாவில் எந்த இடத்தில் உள்ளது என்று குறிப்பிடவில்லை. சோவியத்தின் (ரஷ்யாவின்) கோதுமை சேமிப்பு கிடங்கு என்று மட்டுமே அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது இந்தியாவில் நவீன உணவு தானியம், தண்ணீர், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் கட்டமைத்துத் தரும் நிறுவனங்கள் இந்த புகைப்படத்தை மாதிரி படமாக தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பயன்படுத்தி இருப்பது தெரிந்தது. அவைகளும் இந்த புகைப்படம் எங்கு எடுத்தது என்று குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: jazebeha.com I Archive 1 I tradearabia.com I Archive 2
நீண்ட தேடலுக்குப் பிறகும் இந்த சேமிப்பு கிடங்கு பற்றிய விவரம் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் 2013ம் ஆண்டு ஐக்கிய அரசு நாடுகளைச் சேர்ந்த ஊடகம் ஒன்று தன்னுடைய செய்தியில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. அதில் எகிப்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்கை உருவாக்க யுஏஇ உதவும் என்று குறிப்பிட்டிருந்தனர். மாதிரி படமாகத்தான் இந்த படத்தை வைத்திருந்தனர். இந்த படம் உண்மையில் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
ரஷ்யாவில் இருந்து வெளியான சில செய்திகள், பதிவுகளில் இந்த சேமிப்புக் கிடங்கின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அசல் பதிவைக் காண: pinterest.ru I Archive 1 I dmitry-maximov.livejournal.com I Archive 2
மத்திய பிரதேச அரசு நவீன சேமிப்புக் கிடங்கை அமைத்துள்ளதா என்று தேடினோம். அப்போது 2015ம் ஆண்டு சேமிப்பு கிடங்கை அமைக்க உள்ளதாக மத்திய அரசு கூறியிருப்பது தெரிந்தது. தனியார் நிறுவனங்கள் இப்படி தானிய சேமிப்பு கிடங்கை அமைக்கும், அதற்கு 10 ஆண்டுகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் அரசு தொழில் உத்தரவாதம் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இவை தனியார் சேமிப்பு கிடங்காக இருக்குமே தவிர, அரசின் சேமிப்பு கிடங்கு என்று கூற முடியாது. இந்த செய்தி 2015ம் ஆண்டு வெளியாகி இருந்தது, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த படத்தை யு.ஏ.இ செய்தி ஊடகம் பயன்படுத்தியிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்காக இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் கடந்த 2020ம் ஆண்டு மழை காரணமாக மத்திய பிரதேசத்தில் பல ஆயிரம் டன் கோதுமை நாசம் ஆனதாக செய்திகளும் கிடைத்தன.
நம்முடைய ஆய்வில், இந்த நவீன சேமிப்பு கிடங்கு எங்கு உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை. ஆனால், ரஷ்யாவில் உள்ளதாக சில பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. மேலும், பல ஆண்டுகளாக இந்த புகைப்படத்தை செய்தி மற்றும் சமூக ஊடகத்தில் பலரும் பயன்படுத்தி வந்திருப்பதையும், தானிய கிடங்கு தயாரிப்பாளர்கள் இந்த படத்தை மாதிரி படமாகப் பயன்படுத்தி வருவதையும் காண முடிகிறது. இதன் அடிப்படையில் இது சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்ட நவீன சேமிப்பு கிடங்கு இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள நவீன தானிய சேமிப்பு கிடங்கு என்று பகிரப்படும் படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் உலா வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மத்தியப் பிரதேச அரசு கட்டிய நவீன தானியக் கிடங்கா இது?
Fact Check By: Chendur PandianResult: False
