
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அழியாத புனித குர்ஆன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
உப்பு படிந்தது போன்ற புத்தகம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1912 ல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட புனித அல்-குர்ஆன்.100 ஆண்டு தாண்டியும் அழியாமல் இருக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Ameer Khan என்ற ஃபேஸ்புக் ஐடி-கொண்ட நபர் 2021 அக்டோபர் 31ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தைப் பார்க்கும் போது அது இஸ்லாமியர்களின் மிகப்புனித நூலான அல் குர்-ஆன் புத்தகம் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அட்டைப் படத்தைக் காட்டவில்லை. எதன் அடிப்படையில் இது குர்ஆன் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த புத்தகம் குர்ஆன் தானா, 1912ம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து, நூறு ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதும், இது உண்மைதானா என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது. கிறிஸ்தவர்களும் இது கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அழியாத பைபிள் என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதாக அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது, இந்த புகைப்படத்தை 2014ம் ஆண்டில் கேத்தரின் மெக்வெர் என்பவர் தன்னுடைய பிளாக் பக்கத்தில் பதிவிட்டிருப்பது தெரியவந்தது. அதில், “சான் பிரான்சிஸ்கோவில் ஒரு கலைக் கூடத்தில் பார்வையிட்ட போது புத்தகங்களை படிக மயமாக்கல் செய்யப்பட்டிருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். புத்தகத்தை எப்படி படிக மயமாக்குவது என்று விசாரித்த போது அதற்கு 400 டாலர் கொடுத்து பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்றனர். இதனால் வீடு திரும்பிய நான் கூகுளில் இது பற்றித் தேடினேன். புத்தகத்தை மற்றும் இதர பொருட்கள் மீது கிரிஸ்டல் உருவாக்குவது எப்படி என்று இலவசமாகவே பல ஆலோசனைகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று 6 டாலருக்கும் குறைவான அளவில் பொருட்கள் வாங்கி கிரிஸ்டலைசேஷன் செய்தேன்” என்று கூறி, புத்தகத்தின் மீது எப்படி இப்படி கிரிஸ்டல்களை உருவாக்குவது என்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால், இது என்ன புத்தகம் என்று குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: stuffyoucanthave.blogspot.com I Archive
ஏ.எஃப்.பி வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக்கில் கேத்தரின் மேக்வேரிடம் இது குறித்து விசாரித்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு அவர், “இது பைபிளோ, குர்-ஆனோ, வேறு எந்த ஒரு மத புத்தகமோ இல்லை. ஜெர்மனி – ஆங்கில அகராதி புத்தகம். என்னுடைய புத்தகத்தை பைபிள் அல்லது வேறு ஒரு மதத்தின் ஆச்சரியப்படத்தக்க அதிசய புத்தகம் என்று பகிர்ந்து வருவது வேடிக்கையாக உள்ளது” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
1912ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து குர்-ஆன் ஏதும் எடுக்கப்பட்டதா என்று தேடிப் பார்த்தோம். 1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. அதில் இருந்து குர்-ஆன் எடுக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. மேலும், 1912ம் ஆண்டில் டைட்டானிக் தவிர்த்து வேறு எந்த ஒரு கப்பலும் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதாக செய்தி நமக்கு கிடைக்கவில்லை.
நம்முடைய ஆய்வில், இந்த புத்தகம் கடலுக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டது இல்லை, வீட்டில் போட்டோஷூட் செய்வதற்காக உருவாக்கப்பட்ட புத்தகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மதங்களின் புனித புத்தகம் இல்லை, அகராதி புத்தகம் என்பதும் உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து மீட்கப்பட்ட குர்-ஆன் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அழியாத குர்-ஆன் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குர்-ஆன் இதுவா?
Fact Check By: Chendur PandianResult: False
