FACT CHECK: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை மு.க.ஸ்டாலின் பாராட்டினாரா?
வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மு.க.ஸ்டாலினுடன் சிலர் நிற்கும் புகைப்படம் மற்றும் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு என வெளியான செய்தியை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த K.R.குகேஸை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். வழக்கு தொடரப்போகும் இந்த இசை வேளாளர் பேரவையின் பொதுச் செயலாளர் ராஜேஸ்வரன் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா அவர்களின் சொந்த சகோதர் ஆவார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், "இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த K.R.குகேஷை விடியல் முதல்வர் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை A. M. Arunmozhidhevan என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 நவம்பர் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வன்னியர் சாதிக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களை தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்துப் பாராட்டியதாகப் படம் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் உண்மையில் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் வழக்கு தொடர்ந்த, தொடரப்போகும் என்று இரண்டு விதமான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். எனவே, இந்த பதிவு வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்ட போது பதிவிடப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே, இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது, இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இசை முழக்கம் டிவி என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்த அந்த பதிவைப் பார்த்தோம்.
அசல் பதிவைக் காண: Facebook
அதில், "நம் சமுதாயத்தின் குரலாக இசை முழக்கம் மாத இதழை நம் குலசாமி தலைவர் இல்லம் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து வணங்கி அவரின் ஆசியுடன் மாண்புமிகு தலைவர் தளபதி அவர்கள் இன்று அறிவாலயத்தில் வெளியிட்டு பேரவைக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இசை முழக்கத்தை மிக சிறப்பாக வடிவமைத்து இரவு பகலாக உழைத்த பொதுச் செயலாளரும் ( ஆசிரியர்) திரு ராஜேஸ்வரன் மற்று அபி அப்பா அவர்களுக்கும், இசை முழக்க குழுவுக்கும் என் நன்றிகள். மாத இதழ் மிக சிறப்பாக வந்துள்ளது. நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வாங்கி பயனடைய வேண்டுகிறேன் என்றும் சமுதாய பணியில் KR குகேஷ் BA நிறுவனர் - தலைவர்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
வன்னியர் உள் இட ஒதுக்கீடு என்பது 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அப்படி இருக்கும்போது 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு தொடர்ந்தவர்களை அழைத்து பாராட்டியிருக்க வாய்ப்பில்லை. இதன்மூலம், இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், "வழக்கைத் தொடர்ந்த இசை வேளாளர் பேரவையின் பொதுச்செயலாளர் ராஜேஸ்வரன், துர்கா ஸ்டாலினின் சொந்த சகோதரர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். துர்கா ஸ்டாலின் உடன் பிறந்தவர்கள் யார் என்று ஏதும் தகவல் கிடைக்கிறதா என்று பார்த்தோம்.
அப்போது அவருடைய சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி என்று செய்தி கிடைத்தது. துர்கா ஸ்டாலினுக்கு பார்வதி, ஜெயந்தி என்று இரண்டு சகோதரிகள் இருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. ராஜேஸ்வரன் என்று சகோதரர் இருப்பதாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
எனவே, இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் உதவியாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், ‘’வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை அழைத்து ஸ்டாலின் பாராட்டினார் என்று பரவும் தகவல் தவறானது. துர்கா ஸ்டாலினுக்கு ஒரே ஒரு சகோதரர்தான் உள்ளார். அவரது பெயர் ராஜமூர்த்தி" என்றார்.
வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக தி.மு.க, தமிழ்நாடு அரசு உள்ளதா என்று பார்த்தோம். உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்த செய்தி கிடைத்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை மு.க.ஸ்டாலின் அழைத்துப் பாராட்டினார் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து பாராட்டினார் என்று பகிரப்படும் படம் 2019ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை மு.க.ஸ்டாலின் பாராட்டினாரா?
Fact Check By: Chendur PandianResult: False