
சி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்ததாகவும், இதற்காகத்தான் நீட் தேர்வு அவசியம் என்றும் சிலர் ஒரு பிரிஸ்கிரிப்ஷனை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அது தமிழகத்தில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் (+91 9049053770) சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், மருத்துவமனை ஒன்றின் பில் இருந்தது. சி.டி ஸ்கேன் என்பதற்கு பதில் சிட்டி ஸ்கேன் என்று இருந்தது. நிலைத் தகவலில், “இதுக்கு தான் டுமிலன்ஸ்களா.. படிங்க ஒழுங்கா னு சொல்றது.. 😷 நீட் தேர்வு ஏன் தேவைனு சொல்றோம் இப்போ தெரியுதா?” என்று கூறப்பட்டு இருந்தது.
ஃபேஸ்புக்கில் அந்த பதிவை Ramya Iyer என்பவர் 2020 நவம்பர் 8ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்று அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நீட் தேர்வு தேவையில்லை என்று கருதும் மாநிலங்களுக்கு நீட் தேர்வு நடத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கூறுகிறது. நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.
நீட் என்பது முழுக்க முழுக்க வசதியானவர்களுக்கானது. ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் வகையில் உள்ளதால் நீட் தேர்வை எதிர்ப்பதாகத் தமிழக கல்வியாளர்கள் கூறுகின்றனர். நீட் தேர்வுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு சரியா, தவறா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், மருத்துவமனை ஒன்று சி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று பிழையாக எழுதிக்கொடுத்த ரசீதைக் காட்டி, இதற்காகத்தான் நீட் படிக்க வேண்டும் என்று சொல்கிறோம் தமிழர்களே (டுமிலன்ஸ் என்று தமிழர்களைக் கொச்சைப்படுத்திப் பதிவிட்டுள்ளனர்) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழக மருத்துவர்களின் தகுதியைப் பற்றி பேசுகின்றனர். தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் எல்லோருமே நீட் தேர்வு எழுதி அதன் அடிப்படையில் மருத்துவம் படித்தவர்கள் இல்லை. அனைவரும் தகுதி அற்றவர்கள் என்று கூற வருகிறார்களோ என்னவோ தெரியவில்லை!
இந்த மருத்துவமனை எங்கே உள்ளது என்று பார்த்தோம். தமிழ்நாட்டில் இல்லை என்பதை அதில் உள்ள முகவரியைப் பார்த்தே தெரிந்துகொள்ள முடிந்தது. “ஷமீனா மெட்டார்னிட்டி அண்டு நர்சிங் ஹோம், ஹைதராபாத்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2018ம் நோயாளி ஒருவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.
அந்த மருத்துவமனை ஹைதராபாத்தில் உள்ளது என்பதை உறுதி செய்யக் கூகுளில் தேடினோம். அப்போது ஷமினா மெட்டார்னிட்டி மற்றும் நர்சிங் ஹோம் ஹைதராபாத் நகரில் பவானி நகர் காவல் நிலையத்துக்கு அருகே இருப்பதாக முழு முகவரி நமக்குக் கிடைத்தது.
ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று எழுதிக் கொடுத்ததற்கு எதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நீட் தேர்வு கட்டாயம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.
இந்த மருத்துவமனை ஐதராபாத்தில் உள்ளது என்பது உறுதியாகிறது. தெலங்கானாவில் யாரோ ஒரு மருத்துவர் அல்லது உதவியாளர் தவறாக எழுதியதை வைத்துக் கொண்டு, தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. நீட் தேர்வு எழுதாததால் தமிழக மருத்துவர்களின் தரம் கேள்விக் குறியதாக உள்ளது என்பது போல பதிவு உள்ளது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதன் அடிப்படையில் இது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஹைதராபாத்தில் ஏதோ ஒரு மருத்துவமனையில் தவறாக பிரிஸ்கிரிப்ஷன் கொடுக்கப்பட்டதை வைத்து தமிழக மருத்துவர்களின் தரத்தை விமர்சித்து பதிவிடப்பட்டிருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சிட்டி ஸ்கேன் என்று தவறாக எழுதிக் கொடுத்த டாக்டர்… தமிழக மருத்துவர்களின் தரம் பற்றி சந்தேகம் கிளப்பிய பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
