
‘’டிஜிட்டல் இந்தியாவின் குஜராத்- கண்கொள்ளாக் காட்சி,’’ என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உண்மையில் அவை குஜராத்தில் எடுக்கப்பட்டவையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
குடிசைப்பகுதி படங்கள் இரண்டு பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “டிஜிட்டல் இந்தியாவின் டண்டனக்கா குஜராத் கண் கொள்ளா காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Rajasait என்பவர் 2020 நவம்பர் 8ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மும்பை தாராவியில் எடுக்கப்பட்ட படங்கள் பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படங்கள் உண்மையில் குஜராத்தில்தான் எடுக்கப்பட்டதா அல்லது தாராவியில் எடுக்கப்பட்டதா, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
முதலில் பெரிய குழாயின் மீது கேன்களை சிறுவன் ஒருவன் தூக்கிச் செல்லும் புகைப்படத்தை ஆய்வு செய்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் மும்பை தாராவியில் எடுக்கப்பட்டதாகப் பல ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை Kuni Takahashi என்பவர் எடுத்திருந்ததாகக் குறிப்பு இருந்தது. இதன் அடிப்படையில் கூகுளில் தேடினோம்.

அசல் பதிவைக் காண: kuni.photoshelter.com I Archive
அப்போது kuni.photoshelter.com என்ற தளத்தில் இந்த புகைப்படம் இருப்பது தெரிந்தது. அதில், இந்த புகைப்படம் 2009ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி எடுக்கப்பட்டது. அந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. காலையில் 3 மணி நேரமும் மாலையில் மூன்று மணி நேரமும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படத்துக்கும் குஜராத்துக்கும் தொடர்பில்லை என்பது தெரிந்தது.
டிஜிட்டல் இந்தியா என்பது நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்பு அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். 2009ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, இளைஞர்கள் பல்துலக்கும் புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, அதுவும் பல ஆண்டுகளாக பல ஊடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. இந்த புகைப்படமும் கூட மும்பை தாராவியில் எடுக்கப்பட்டது என்று பதிவிட்டிருந்தனர். gettyimages தளத்தில் அந்த புகைப்படம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்ததால் அதில் தேடினோம்.

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive
gettyimages.inல் அந்த புகைப்படம் விற்பனைக்கு இருப்பது தெரிந்தது. இந்த புகைப்படம் 2004ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி தாராவி குடிசைப் பகுதியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். 2004 ஜனவரி என்பது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற காலம்.
இதன் மூலம் இந்த இரண்டு புகைப்படங்களும் டிஜிட்டல் இந்தியா அறிவிப்பு வெளியாவதற்கு (2015ம் ஆண்டு) பல ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் குஜராத்தில் உள்ள குடிசைப்பகுதியின் நிலை என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் குஜராத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்று பகிரப்படும் இரண்டு புகைப்படங்களும் மும்பையில் எடுக்கப்பட்டவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்த புகைப்படங்கள் குஜராத்தில் எடுக்கப்பட்டவை இல்லை!
Fact Check By: Chendur PandianResult: False
