இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் உடல் முழுக்க புழு வைத்து மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நோயாளி ஒருவருக்கு தலையில் போடப்பட்ட கட்டுகளை அவிழ்க்கும் போது தலையில் புழுக்கள் நெளியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் இருந்தார். தங்கள் குழந்தைகளை கொன்ற பள்ளி குண்டுவெடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய பாலஸ்தீன பெண்களை ஏரியல் ஷரோன் கேலி செய்தார். ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பாலஸ்தீனியர்கள் இப்போது புழுக்களின் உணவாகிவிட்டார்கள் என்று ஏரியல் ஷரோன் ஆணவத்துடன் கூறினான்

ஏரியல் ஷரோனை அவர் இறப்பதற்கு முன் புழுக்களின் உணவாக மாற்றினான் இறைவன்

அவரின் கண்களில் இருந்தும், காதில் இருந்தும் புழுக்கள்‌ வெளியேற செய்தான்..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவானது நவம்பர் 7, 2023 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நடந்து வரும் சூழலில் இரு தரப்பினரும் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் புழு புழுத்து உயிரிழந்ததாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில், இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் உயிரிழந்தது பற்றி ஆய்வு செய்தோம். அவர் 2006ம் ஆண்டில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக கோமாவுக்கு சென்றதாகவும், 2014ம் ஆண்டு அவர் உயிரிழந்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவருக்கு இஸ்ரேல் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த புகைப்படம், வீடியோ எதுவும் கிடைக்கவில்லை. அவர் சிகிச்சை பெறுவது போன்று மாதிரி புகைப்படங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்தன. மேலும், அவர் உயிரிழந்த பிறகு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: upi.com I Archive

வீடியோவை முழுவதும் பார்க்கும் போது அந்த நபருக்கும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோனுக்கும் துளி கூட உருவ ஒற்றுமை இல்லை. மேலும் புழுக்களை அகற்றி சுத்தம் செய்யும் போது அந்த நபர் அலறுவதை கேட்க முடிகிறது. ஆனால், ஏரியல் ஷரோனோ கோமாவில் இருந்து மீளாமலேயே உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன. இவை எல்லாம் இந்த வீடியோவில் உள்ள நபர் ஏரியல் ஷரோன் இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

கடைசியாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். 2021, 2022 ஆண்டுகளில் இந்த வீடியோவை சிலர் யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தனர். அதில் இந்த நபர் யார், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. ஆதரவற்ற முதியவர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

உண்மைப் பதிவைக் காண: YouTube

யாரோ அடையாளம் தெரியாத ஒரு முதியவர் முகத்தில் புழுக்கள் புழுத்தது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் பதிவிடப்பட்ட வீடியோவை எடுத்து, தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் போர் சூழலில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் என்று தவறாக பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. நம்முடைய ஆய்வில் புழு புழுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபர் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் தலையில் புழுக்கள் புழுத்து உயிரிழந்தார் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் கொடூரமான மரணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False