அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் வதந்தி…
அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம்! பா.ஜ.க மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகினாலும் கவலை ஏதும் இல்லை. கட்சிக்காரர்களை வேவு பார்ப்பது, ஆடியோ, வீடியோ லீக்ஸ் என கட்சிக்கு அவரால் உண்டான அவப்பெயரே மிச்சம். அண்ணாமலையால் கட்சி இங்கு ஒரு அங்குலம் கூட வளரவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி நிச்சயம் தொடரும். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பாஜக சேிய மகளிரணி தலைவர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை கோபால் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக செய்திகள் வெளியாகின. நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்ததது பற்றி ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை பாஜக மறுக்கவில்லை. அதே நேரத்தில் இந்த தகவல் தவறானது என்று பாஜக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
கூட்டணி பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றும் அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து என்றும் தமிழ்நாடு பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று வானதி சீனிவாசன் கூறியதாகத் தினமலர் லோகோவோடு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டு வழக்கமாக தினமலர் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. அதன் வடிவமைப்பில் வேறுபாடு இருந்தது. தமிழ் ஃபாண்ட் கூட சற்று வித்தியாசமாக இருந்தது. அண்ணாமலையால் அவப்பெயர்களே மிச்சம் என்று வானதி கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். ஆனால், மார்ச் 18, 2023 அன்று வானதி சீனிவாசன் இப்படி பேட்டி அளித்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
எனவே, இந்த நியூஸ் கார்டின் நம்பகத்தன்மையை அறிய முதலில் தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. மேலும், அண்ணாமலையை விமர்சித்து வானதி கூறியதாக எந்த ஒரு செய்தியையும் தினமலர் வெளியிடவில்லை.
எனவே இந்த நியூஸ் கார்டு குறித்து தினமலர் நாளிதழ் சமூக ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இது போலியானது என்று உறுதி செய்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அண்ணாமலையால் பா.ஜ.க-வுக்கு அவப்பெயர் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் வதந்தி…
Fact Check By: Chendur PandianResult: False