
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாக சில செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதைப் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம். மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நிலைத் தகவலில், “மாநில அளவில் தேர்வெழுதினால் இன்னொரு மாநிலத்தில் எப்படி போய் சேர முடியும்? அப்படியானால் நமது 15% த்தில் வெளிமாநிலத்தவர் வருவார்கள். நாம் 85% த்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? மாநில அளவில் தேர்வு நடத்துவதற்கு நீட்டையே எழுதிவிடலாமே..தகுதி தேர்வே கூடாது என்பதுதானே திமுகவின் கோரிக்கை?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Sundar Raja Cholan என்பவர் 2021மே 23ம் தேதி பதிவிட்டுள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
AIADMK Fast News TN என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Karupu Saravan என்பவர் இரண்டு நியூஸ் கார்டுகளை சேர்த்து பதிவிட்டிருந்தார். அதில் நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் நீட் தேர்வு நடத்த பொன்முடி கோரிக்கை விடுத்திருப்பது தி.மு.க-வின் பித்தலாட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இவர்களைப் போல பலரும் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. இந்த சூழலில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு 12ம் வகுப்புத் தேர்வு நடத்துவது குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தில் மாநில அளவில் நீட் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதாக செய்தி வெளியானது. தந்தி டி.வி இதை வெளியிடவே பலரும் இதை ஷேர் செய்து தி.மு.க-வை விமர்சிக்க தொடங்கினர். ஆனால், இந்த தகவல் தவறானது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள சூழலில் தொடர்ந்து இந்த தவறான தகவல் மட்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தந்தி டி.வி வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை தேடினோம். ஆனால், தமிழகத்துக்குத் தனியாக நீட் தேர்வு நடத்துவது குறித்து வெளியான ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகள் அகற்றப்பட்டு இருந்தன.
ஆனால், தமிழக பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தந்தி டி.வி வெளியிட்ட ட்வீட் பதிவை ஸ்கிரீன்ஷாட் செய்து பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அதே நேரத்தில் தந்தி டி.வி-யில் தமிழக அரசு வெளியிட்ட மறுப்பு அடிப்படையிலான நியூஸ் கார்டு இருந்தது. அதில், “தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும். மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டத்தில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பைப் பார்த்தோம். அதில், “கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல 12ம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும், என உறுதிப்படத் தெரிவித்தார்.
அமைச்சரின் இக்கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் பயிலும் 12ம் வகுப்பு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: tn.gov.in I Archive
செய்தியை முந்தித் தரும் அவசரத்தில் ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டிருப்பது தெரிகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்துக்குத் தனியாக நீட் தேர்வு நடத்த அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழகத்துக்குத் தனியாக நீட் தேர்வு நடத்த அமைச்சர் பொன்முடி கோரிக்கை என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி கோரியதா?
Fact Check By: Chendur PandianResult: False
