செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கேட் மீது ஏறி தப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டி.வி, பத்திரிக்கை நிருபர்கள், கேமராமேன்கள் சூழ்ந்திருக்க அகிலேஷ் யாதவ் கேட் மீது ஏறி அடுத்தப் பக்கம் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கேள்வி கேட்டா பதில் சொல்லு.. அதுக்கு ஏன் ஓடற..? அகிலேஷ் யாதவ் 😀😀😀" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் அகிலேஷ் யாதவ் கேட் ஏறி தப்பிச் சென்றதாக சிலர் சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவர் ஏன் அந்த கேட் முன்பு பேட்டி அளிக்க வேண்டும்... அதுவும் தனியாளாக வந்து என்ற கேள்வி எழவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.


வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஜெய்பிரகாஷ் நாராயணனுக்கு அஞ்சலி செலுத்த கேட் ஏறி குதித்துச் சென்றதாக, பல செய்திகள் மற்றும் யூடியூப் வீடியோக்கள் நமக்குக் கிடைத்தது.

Archive

2023ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், சோஷலிச தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளையொட்டி அவரது நினைவகத்தில் அஞ்சலி செலுத்த அகிலேஷ் யாதவ் சென்றார். ஆனால் ஜெய்பிரகாஷ் நாராயண் நினைவகத்திற்குள் செல்ல உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி அகிலேஷ் யாதவ் உள்ளே சென்றார் என்று செய்திகள் தெரிவித்தன. இந்த நினைவகத்தை உத்தரப்பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்த போது 2016ம் ஆண்டு அவர் திறந்து வைத்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: dinamani.com I Archive 1 I theweek.in I Archive 2

லக்னோவில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஜெய்பிரகாஷ் நாராயண் நினைவகத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், தடையை மீறிப் பூட்டிய கேட்டில் ஏறி குதித்து அகிலேஷ் யாதவ் அஞ்சலி செலுத்திய வீடியோவை, நிருபர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடிய அகிலேஷ் யாதவ் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சுதந்திர போராட்ட வீரர் ஜெய்பிரகாஷ் நாராயண் நினைவகத்திற்குள் நுழைய அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கேட் ஏறி அவர் உள்ளே சென்ற வீடியோவை நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தப்பி ஓடினார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel