கருணாநிதி நினைவிடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு தங்க தமிழ்செல்வனுக்கு வழங்கப்பட்டதா? – விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம்

சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த தங்க தமிழ்செல்வனுக்கு கருணாநிதி நினைவிடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

TAMILSELVAN 2.png

 Facebook Link I Archived Link

தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடும் நியூஸ்கார்டு போன்ற ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கருணாநிதி சமாதியை அலங்கரிக்கும் பொறுப்பை தங்க தமிழ்செல்வனுக்கு ஒதுக்கி தி.மு.க தலைமை முதல் அறிவிப்பு – தங்கதமிழுக்கு பதவி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, DMK Fails என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 4ம் தேதி வெளியிட்டுள்ளனர். இந்த படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் புகார் மனு அளித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த தங்க தமிழ்செல்வன். அதைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. டி.டி.வி.தினகரனுடன் இணைந்து அ.ம.மு.க-வில் பணியாற்றி வந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வாய்ப்பை இழந்தார். இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்சியிலிருந்து வெளியேறி தி.மு.க-வில் இணைந்தார்.

அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க-வில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப் போல, தங்க தமிழ்ச்செல்வனுக்கும் பதவி வழங்கப்படும் என்று பேசப்பட்டது. என்னுடைய செயல்பாட்டைப் பார்த்து பதவி வழங்குவார்கள் என்று தமிழ்செல்வனும் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில், கருணாநிதி சமாதியைப் பராமரிக்கும் பொறுப்பு தங்க தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தெரிவித்துள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தி.மு.க-வின் எந்த ஒரு அறிவிப்பும் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டுவிடும். கட்சியின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் அவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.

தி.மு.க-வின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் சமீபத்தில் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட அறிவிப்பு மற்றும் அது தொடர்பான செய்திகள் மட்டுமே இருந்தன. தங்க தமிழ்செல்வனுக்கு பதவி, பொறுப்பு வழங்கப்பட்டது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் நமக்குக் கிடைக்கவில்லை. அதேபோல், ட்விட்டர் பக்கத்திலும் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

உதயநிதி ஸ்டாலின் நியமனம் தொடர்பான அறிவிப்பு…

Archived Link

தி.மு.க இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…

Archived Link

தங்க தமிழ்ச்செல்வனுக்கு தி.மு.க-வில் பொறுப்பு வழங்கப்பட்டது தொடர்பாக செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. 

TAMILSELVAN 3.png

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், விஷமத்தனமாக இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கருணாநிதி நினைவிடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு தங்க தமிழ்செல்வனுக்கு வழங்கப்பட்டதா? – விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False