குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நெருங்கி விழும் நிலையில் உள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையின் கால் பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அடேய் ஸ்பேஸ் டெக்னாலஜி சங்கிகளா... பட்டேல் சிலையை கவனிங்கடா... சிவாஜி சிலை உடைந்தது போல பட்டேல் சிலையும் உடைஞ்சிடப்போகுது கவனம்

(Independent Fact Checkers'னு எவன் பெயரையாவது சொல்லி நம்ம Mark இதை hide பண்ணிடுவான் அதற்குள் பலருக்கும் பகிர்ந்து விடுங்கள்)" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகின் மிகவும் உயரமான சிலையாக குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை உள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை உடைந்தது போல, குஜராத்தில் உள்ள வல்லபாய் பட்டேல் சிலையும் உடையப் போகிறது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ஆதாரமாக சிலையில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: nytimes.com I Archive

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது குஜராத் பட்டேல் சிலையின் முழு படங்கள் பல நமக்குக் கிடைத்தன. நிதானமாகத் தேடிக் கொண்டிருக்கும் போது நியூயார்க் டைம்ஸ் இணையதள பக்கத்தில் இந்த படம் வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த இணையதள பக்கத்திற்குச் சென்று பார்த்தோம். 2018ம் ஆண்டு அந்த புகைப்படத்தை அவர்கள் பதிவிட்டிருந்தனர். வினாடி வினா பகுதியில் அந்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

அதில், "உலகின் மிக உயரமான சிலை கட்டுமானத்தின் கடைசிக்கட்ட பணிகளைக் கட்டுமான பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியானது நவம்பர் 2, 2024 அன்று வெளியாகி இருந்தது. பட்டேல் சிலை எப்போது திறக்கப்பட்டது என்று பார்த்த போது, அக்டோபர் 31, 2018 அன்று திறக்கப்பட்டதாக இருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவானது.

Archive

தொடர்ந்து தேடிய போது 2018ம் ஆண்டில் இந்த புகைப்படத்தைப் பலரும் தங்கள் பிளாக், சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இது தொடர்பாக இந்திய அரசின் PIB-ல் ஏதேனும் தகவல் வெளியாகி உள்ளதா என்று அதன் எக்ஸ் தள பக்கத்திற்குச் சென்று பார்த்தோம். அதில், இந்த புகைப்படம் கட்டுமானம் நடந்த போது எடுக்கப்பட்டது. பட்டேல் சிலை உடையும் நிலையில் உள்ளது என்று பரவும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பட்டேல் சிலை விரிசல்கள் ஏற்பட்டு நெறுங்கி உடையும் நிலையில் உள்ளது என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை கட்டுமான பணி நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இப்போது உடையும் நிலையில் உள்ளது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel

Claim Review :   குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நெருங்கி விழும் நிலையில் உள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Claimed By :  Social Media Users