
‘’பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
Time Pass என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 9, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 பேருக்கு அவர் காலேஜில் வேலைக்குச் சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இதில் கூறப்பட்டுள்ளது போல, உண்மையில் அர்ச்சனா பட்நாயக் இப்படி ஏதேனும் செய்தாரா என விவரம் தேட தொடங்கினோம். கடந்த 2013ம் ஆண்டில், கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக பணியமர்த்தப்பட்ட அர்ச்சனா பட்நாயக், அங்கு, 2017 வரை பணிபுரிந்திருக்கிறார். பிறகு அவர் ஒடிசாவிற்கு பணி மாற்றப்பட்டார். இதுபற்றி தி இந்து மற்றும் மாலைமலர் வெளியிட்ட செய்திகளின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
TheHindu Link | Maalaimalar Link |
ஆனால், எவ்வளவு தேடியும் அர்ச்சனா பட்நாயக் இப்படி எதுவும் செய்தாரா என்பது பற்றி அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் கிடைக்கவில்லை. எனினும், சில பிளாக்ஸ்பாட் பக்கங்களில் இதுபற்றிய செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அந்த செய்திகள் கூட, 2014ம் ஆண்டு வெளியானவை ஆகும். அவற்றில் ஆட்சியர் அர்ச்சனாவின் பரிந்துரையின் பேரில் பெண்கள் உள்பட 12 பேருக்கு, கோவையை சேர்ந்த தனியார் காலேஜ் நிர்வாகம் வேலை அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
Thinaanjal News Link | Trttamilolli News Link | Puradsifm News Link |
இதையடுத்து, இந்த தகவலை உறுதி செய்வதற்காக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, 5 ஆண்டுகள் பழைய செய்தி என்பதால் இதுதொடர்பாக போதிய விவரம் தெரியவில்லை என, ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2014ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு பழைய செய்தியை புதியதுபோல பகிர்ந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, பழைய செய்தியை புதிது போல சித்தரித்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய பழைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வாசகர்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்: உண்மை அறிவோம்…
Fact Check By: Pankaj IyerResult: Mixture
