ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களை தன்னுடைய ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சென்று மீட்டு வந்த முஹம்மது சுபஹான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:



உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வெள்ளத்தில் காரில் சிக்கியவர்களை ஜேசிபி வாகனத்தில் சென்று ஒருவர் காப்பாற்றி அழைத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை தனது JCB வாகனத்தால் தைரியமாக மீட்டு வந்தார் முஹம்மது சுபஹான் பாய்..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தில் காரில் சிக்கிய குடும்பத்தை ஜேசிபி வாகனத்தில் ஒருவர் மீட்டதாகப் பலரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வீடியோ தெளிவாக இல்லை. மேலும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வெளியானதாகப் பார்க்கவில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.



உண்மைப் பதிவைக் காண: Youtube

வீடியோ காட்சியை Invid WeVerify plugin உதவியுடன் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமீப நாட்களாகப் பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது. சற்று பின்னோக்கி முதலில் இந்த வீடியோ எப்போது பதிவிடப்பட்டது என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். அப்போது, இந்த வீடியோவை 2024 ஏப்ரல் 28 அன்று ஒருவர் யூடியூபில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.



அரபி மொழியில் அந்த யூடியூப் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதை கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழிபெயர்த்துப் பார்த்தோம். "கதாநாயகன் ஆன தருணம்: ஒருவர் வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரைக் காப்பாற்றுகிறார்" என்பது போன்ற அர்த்தத்தில் பதிவிடப்பட்டிருந்தது. எங்கு இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. 2024 ஏப்ரலில் இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருப்பதன் மூலம் 2024 செப்டம்பரில் ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த வீடியோ எடுக்கப்படவில்லை என்பது மட்டும் உறுதியானது.


Archive

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று அறிய தொடர்ந்து கூகுள் லென்ஸ் உள்ளிட்ட புகைப்படங்களைப் பதிவேற்றித் தேடும் தளங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது, வாடி ஜப்பா, பிஷ்ஷா (Wadi Jaaba - Bisha🇸🇦) என்ற இடத்தில் காரில் சிக்கிக்கொண்ட நான்கு பேரைக் காப்பாற்றிய நபர் என்று குறிப்பிட்டு வேறு சில பதிவுகள் நமக்குக் கிடைத்தன. இந்த Wadi Jaaba - Bisha🇸🇦 எங்கு உள்ளது என்று தேடிப் பார்த்த போது சௌதிஅரேபியாவில் அப்படி ஒரு இடம் இருப்பது தெரியவந்தது.



உண்மைப் பதிவைக் காண: gulfnews.com I Archive

இந்த வீடியோ சௌதிஅரேபியாவில் எடுக்கப்பட்டது தானா என்பதை உறுதி செய்துகொள்ள கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது இந்த சம்பவம் சௌதி அரேபியாவில் நடந்ததாக செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில், மிகவும் தெளிவாக எக்ஸ் போஸ்டில் வெளியிடப்பட்டிருந்த வீடியோவையும் பதிவிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த சம்பவம் 2024 ஏப்ரல் மாதம் சௌதி அரேபியாவில் நடந்தது என்பது உறுதியாகிறது.


Archive

ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டவர் என்று பரவும் வீடியோ சௌதி அரேபியாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சௌதி அரேபியாவில் 2024 ஏப்ரலில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது காரில் சிக்கிக்கொண்டவர்களை ஜேசிபி வாகனத்தில் சென்று மீட்ட வீடியோவை ஆந்திராவில் எடுக்கப்பட்டது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel

Claim Review :   ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களை தன்னுடைய ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சென்று மீட்டு வந்த முஹம்மது சுபஹான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Claimed By :  Social Media User