அய்யாக்கண்ணு, உதயகுமார் மற்றும் நந்தினி ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு போராடுகிறார்களா?

அரசியல் சமூக ஊடகம்

‘’நந்தினி, அய்யாக்கண்ணு மற்றும் உதயகுமார் போன்றவர்கள் பணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு எதிராக போராடும் போலிகள்,’’ என்று கூறி வைரலாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Rathnam Murugesan என்பவர் ஜூலை 5, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், அய்யாக்கண்ணு மோடிக்கு எதிராகப் போராட பணம் வாங்கியதாகவும், இதற்கு திமுக.,தான் காரணம் எனவும் ஒப்புக் கொண்டார் எனக் கூறியுள்ளார். இதேபோல, உதயகுமார் தனது போராட்டங்களுக்கு காசு தரும்படி கேட்டதற்கான வீடியோ ஆதாரம் சமீபத்தில் வெளியானது என்றும், டாஸ்மாக் விற்பனைக்கு எதிராக போராடும் நந்தினிக்கு பலரும் காசு கொடுத்து உதவுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேலே குறிப்பிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் செய்தி பகிர்ந்துள்ளார்களா என தகவல் தேடினோம். அப்போது, நிறைய பேர் இதே தகவலை ஷேர் செய்திருந்த விவரம் கிடைத்தது. ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, முதலில், அய்யாக்கண்ணு விசயத்திற்கு வருவோம். இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, அய்யாக்கண்ணு எந்த இடத்திலும் தன்னை இயக்கியது திமுக.,தான் என்றும், இதற்காக காசு வாங்கினேன் என்றும் கூறவில்லை.

இதுபற்றி ஏற்கனவே நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளோம். நம்மிடம் பேசிய அய்யாக்கண்ணு இந்த தகவலை முழுமையாக மறுத்துள்ளார். அத்துடன், தன்னைப் பற்றி வதந்தி பரப்புவோர் மீது அவர் போலீசில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இதனை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதற்கு அடுத்தப்படியாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி வரும் உதயகுமார், இந்தியாவுக்கு எதிராகப் போராட, சர்ச் மூலமாக பணம் அனுப்புங்கள், என்று கூறினார் எனவும், இதற்கு ரிபப்ளிக் டிவி வீடியோ ஆதாரம் சமீபத்தில் வெளியானது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த வீடியோவே முதலில் தவறான ஒன்று என, இதுபற்றி நாம் விரிவான ஆய்வு நடத்தி ஏற்கனவே முடிவுகளை சமர்ப்பித்துள்ளோம். இதனை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, நந்தினி பணம் வாங்கிக் கொண்டுதான் டாஸ்மாக் எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகிறார் என இவர்கள் கூறியுள்ளது உண்மைதானா என்ற கோணத்தில் நாம் ஆய்வு மேற்கொண்டோம். அரசு ஊழியராக இருந்த நந்தினியின் தந்தை, விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு,
சமூக அக்கறை காரணமாக, தனது மகள் நந்தினி உடன் இணைந்து தமிழகம் முழுக்க பலவித போராட்டங்களை மேற்கொண்டிருக்கிறார். இதில், இவர்கள் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். இதற்காக, பலராலும் தாக்கப்பட்டுள்ளனர். சட்டப்படிப்பு படித்தாலும், தன்மீதுள்ள வழக்குகள் காரணமாக, நந்தினியால் இதுவரை வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள முடியவில்லை.

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் பற்றிய வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தை எதிர்த்து கேள்வி கேட்டார் என்பதற்காக, சமீபத்தில் நந்தினி மற்றும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணம் நடைபெறவிருந்த சூழலில், நந்தினி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன்பின்னர், தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஜாமீனில் வெளிவந்த நிலையில், ஜூலை 10, 2019 அன்று நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் மிக எளிமையான முறையில் நந்தினி, தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, உண்மையிலேயே பணம் பெற்றுத்தான் சமூக பிரச்னைகளுக்கு நந்தினி போராட்டம் நடத்துகிறாரா, என அவரிடமே விளக்கம் கேட்டோம். அவர் இதனை மறுத்துவிட்டார். சொந்த செலவில் பணம் செலவழித்து மக்களுக்காகப் போராடும் தன் மீது சிலர் வேண்டுமென்றே பொய்ப்புகார் அளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் ஊகத்தின் பேரில் ஆதாரமின்றி வெளியிடப்பட்ட தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:அய்யாக்கண்ணு, உதயகுமார் மற்றும் நந்தினி ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு போராடுகிறார்களா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •