‘23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் 24 குழந்தைகள் பெற்ற தாய்’ என்ற தகவல் உண்மையா?
‘’23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் 24 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில் ‘’ திருமணம் முடிந்து 23 வருசத்தில் ஒற்றை இரட்டை குழந்தைகள் என 24 குழந்தைகளுக்குத் தாயென யாராலும் கூற முடியாது... இன்னும் இளமை துள்ளுகிறது...குழந்தை தயாரிப்பு தொடருமாம்..வாழ்த்துவோம் இத்தாயை இந்து ஜனத்தொகையை பெறுக்கும் வேகத்திற்காக...
நம்மவர்கள் இவ்வளவு பெற்றுக்கொள்ளாவிட்டாலும் குறைந்த பட்சம் நான்கு பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த வீடியோ முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது. இதில் நடித்துள்ள பெண்ணின் பெயர் Khushboo Pathak.
‘24 குழந்தைகளின் தாய்’ என்ற பெயரில் குஷ்பூ பதக் நடித்த ஏராளமான வீடியோக்கள், apna aj என்ற யூ டியுப் பக்கத்தில் காண கிடைக்கின்றன.
இது மட்டுமின்றி, 24 குழந்தைகளுக்கு தாய் என்று கூறி Khushboo Pathak நிறைய யூ டியூப் சேனல்களுக்கு வேண்டுமென்றே நகைச்சுவையாக பல முறை பேட்டி கொடுத்து, பிரபலமாகியுள்ளார். மற்றபடி, அவருக்கு 2 குழந்தைகள் மட்டுமே…
ஆனால், 24 குழந்தைகள் பெற்றுள்ளதாகக் கூறி, குஷ்பூ பல்வேறு யூ டியுப் சேனல்களுக்கும் இவ்வாறு தொடர்ச்சியாக, பேட்டி கொடுத்ததன் விளைவாக தற்போது, அவர் மீது போலீஸ் வழக்கு பாயக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நிலைமை கை மீறி போய்விட்ட சூழலில், குஷ்பு பதக் தற்போது ‘’நகைச்சுவைக்காக மட்டுமே இவ்வாறு பேட்டி கொடுத்தேன்,’’ என்று விளக்கம் அளிக்க தொடங்கியுள்ளார்.
மேலும், தனக்குப் பிறந்த 2 குழந்தைகள், தான் வளர்க்கும் செடிகள் உள்ளிட்டவற்றை சேர்த்து ஒட்டுமொத்தமாக, தனக்கு 24 குழந்தைகள் என்று நகைச்சுவையாகப் பேசி, குஷ்பூ பதக் சிக்கலில் மாட்டியுள்ளார், என்பது இதன்மூலமாக தெரியவருகிறது.
இதுதொடர்பான கூடுதல் செய்தி ஆதாரங்கள் இதோ…
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குஷ்பூ பதக் என்ற நடிகை, 24 குழந்தைகளின் தாய் என்ற பெயரில் நகைச்சுவைக்காக, யூ டியுப் சேனல்களில் நிறைய ஷோ நடித்துள்ளார். அதில் ஒரு வீடியோவை எடுத்து, உண்மை என நம்பி, 23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் 24 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் என்று கூறி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram