ஆர்எஸ்எஸ், மோடி பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா?

அரசியல் இந்தியா சர்வதேசம்

மோடி மற்றும் குஜராத் கலவரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், ஐம்பது பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஒருவர் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் Howdy Modi, Houston, TX எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “*மோடி* குஜராத்தில் செய்த படுகொலையையும், நடப்பில் இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்க படுவதையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்ட வீடியோ இது.. மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் குற்றங்கள் ஐம்பது பக்கங்களாக  கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது…

அனைவரும் இதை பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை மௌனம் ஆபத்து மௌனம் ஆபத்து என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் வன்முறை மற்றும் மோடி பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளனர். ஆனால், இன்று என்றால் என்ன தேதி என்று குறிப்பிடவில்லை. மேலும் Howdy Modi என்பது எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் பற்றி விவாதிக்கப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் வந்தது போல இல்லை. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை Pieter Friedrich என்ற யூடியூப் ஐடி கொண்டவர் 2019ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அதில், ஹூஸ்டன் நகர கவுன்சில் (Houston City Council) கூட்டத்தில் ஹவ்டி மோடி நிகழ்ச்சி பற்றிப் பேசிய போது என்று அந்த நபர் குறிப்பிட்டிருந்தார். கவுன்சில் கூட்டம் என்பது மாநகராட்சி, நகராட்சி கூட்டம் போன்றது. ஒருவேளை அவர் அந்த நகர கவுன்சிலராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரைப் பற்றித் தொடர்ந்து தேடினோம். 

உண்மைப் பதிவைக் காண: pieterjfriedrich.medium.com I Archive

அப்போது Pieter Friedrich என்ற அந்த நபர் தன்னுடைய சுய விவர குறிப்பு பகுதியில் தன்னை செய்தியாளர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தெற்காசியா, இந்தியா, மதம், இந்துத்துவா, மனித உரிமை, அரசியலில் மதம் கலப்பது போன்ற பல விஷயங்கள் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதுபவர் என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் அவரை அழைத்துப் பேச வைத்திருக்கலாம் என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: pieterfriedrich.com I Archive 

ஹூஸ்டன் நகர கவுன்சில் கூட்டத்தில் இப்படி உறுப்பினராக இல்லாத நபர் பேச முடியுமா என்று அறிய, அந்த நகர இணையதளத்தில் தேடிப் பார்த்தோம். அப்போது யார் வேண்டுமானாலும் பேச முடியும் என்று தெரிந்தது. இதற்கென விண்ணப்பித்தால் நேரிலோ அல்லது இணையம் மூலம் நேரலையிலோ பேச முடியும் என்று தெரிந்தது. மேலும், கவுன்சில் கூட்டத்தில் பொது மக்கள் பேசும் காட்சிகளும் நமக்கு யூடியூபில் இருந்து கிடைத்தன. அந்த வீடியோவில் ஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையாளர் பீட்டர் பேசும் காட்சியும் வருகிறது. வீடியோவின் 29வது நிமிடத்தில் அவர் பேச அழைக்கப்படுவதையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று அவர் பேசுவதையும் அதில் காணலாம்.

உண்மைப் பதிவைக் காண: houstontx.gov I Archive 

நம்முடைய ஆய்வில், வீடியோவில் உள்ள நபர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதும், அவர் பேசியது அமெரிக்க நாடாளுமன்றம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த போது, பிரதமர் மோடி கலந்துகொண்ட ஹவுடி மோடி நிகழ்ச்சி தொடர்பாக பொது மக்களாக இவர் கருத்து கூறிய வீடியோவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக விவாதிக்கப்பட்டது என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஹூஸ்டன் நகர கவுன்சில் கூட்டத்தில் பொது மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் நிகழ்வில் பத்திரிக்கையாளர் ஒருவர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி பேசிய வீடியோவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் குஜராத் கலவரம் மற்றும் மோடி தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆர்எஸ்எஸ், மோடி பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False