
தன் தொகுதிக்குட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளில் ஒன்றில் பாஜக தோல்வி அடைந்தாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வானதி ஶ்ரீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வேன். ஒரு வார்டில் தோற்றால் கூட எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன்” என்று இருந்தது.
இந்த பதிவை Kovai Siva என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜனவரி 31ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிடுகிறது. இந்த சூழலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட பகுதியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் பாஜக-வை வெற்றி பெற செய்வேன்… ஒரு வார்டில் தோல்வியுற்றாலும் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. வானதி அவ்வாறு கூறியதாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்தோம். முதலில் இது தொடர்பாக செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. வானதி ஶ்ரீனிவாசனின் ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதிலும் அப்படி எந்த ஒரு கருத்தையும் அவர் கூறியதாக இல்லை.

எனவே, புதிய தலைமுறை ஜனவரி 31ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்வையிட்டோம். அதில் வானதி ஶ்ரீனிவாசன் தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, போலியான நியூஸ் கார்டு என்று தெளிவானது. இதை உறுதி செய்ய, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த ராசுஸைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் வானதி ஶ்ரீனிவாசன் பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை தொற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக ஒரு வார்டில் தோற்றாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கோவை தெற்கில் பாஜக ஒரு வார்டில் தோற்றாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
