ஜீ டிவி உரிமையாளர் முன்பாக மோடி கை கட்டி நின்றாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

ஜீ டிவி (Zee) உரிமையாளர் முன்பு பிரதமர் மோடி கைக்கட்டி நின்றார் என்று ஒரு புகைப்படத்தைச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பிரதமர் மோடியை சந்தித்தபோது எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இவர்தான் Zee tmail tv ஓனராம் மோடியைவே கையை கட்டி நிற்க்க வெச்சுருக்கார் அப்போ ஆடு அண்ணாமலை நிலமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Xavier Chinnappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 17ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை, பிரபல தொழிலதிபர் ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். அவர்தான் ஜீ டிவி உரிமையாளர் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive

ஜீ டி.வி-யின் ரியாலிட்டி ஷோவில் சிறுவர்கள் இரண்டு பேர் பிரதமர் மோடியின் திட்டங்களை கிண்டல் செய்யும் வகையில் நடித்தனர். இதை எப்படி அனுமதிக்கலாம் என்று தமிழ்நாடு பா.ஜ.க-வினர் கொந்தளித்தனர். அந்த டி.வி நிறுவனத்திற்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. இந்த சூழலில் அந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் முன்பு மோடி கை கட்டி நிற்கிறார். தொலைக்காட்சி மீது அவரால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்ற வகையில் படத்தைப் பகிர்ந்துள்ளனர். 

ஜீ டிவி-யின் தலைவர் சுபாஷ் சந்திரா ஆவார். அப்படி இருக்கும் போது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை ஏன் தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வு செய்தோம்.

ஜீ டிவி இணையதளத்தைப் பார்வையிட்டோம். அப்போது ஜீ டிவி-யின் கவுரவத் தலைவராக சுபாஷ் சந்திரா பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. தலைவராகக் கோபாலன், நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஒ-வாக புனித் கோயங்கா பெயர் இருந்தது. அந்த பட்டியலில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெயர் இல்லை. மேலும் பல செய்திகளிலும் ஜீ டிவி தலைவர் என்று சுபாஷ் சந்திராவின் பெயரையே குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: zee.com I Archive

ஜீ டி.வி நிர்வாகத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெயர் இல்லை. அவர் அதில் முதலீடு ஏதும் செய்துள்ளாரா, மிகப்பெரிய அளவில் பங்கு வைத்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இதன் மூலம் ஜீ டிவி உரிமையாளர் முன்னிலையில் பிரதமர் மோடி கைக்கட்டி நின்றார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுடன் பிரதமர் மோடி இருக்கும் படத்தை ஜீ டிவி உரிமையாளருடன் இருப்பதாக தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜீ டிவி உரிமையாளர் முன்பாக மோடி கை கட்டி நின்றாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False