சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான யோகேந்திர யாதவின் உண்மையான பெயர் சலீம் என்று சமூக ஊடகங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archive

வட இந்திய அரசியல்வாதியான யோகேந்திர யாதவ் அளித்த இந்தி பேட்டி பகிரப்பட்டுள்ளது. அதில், பேட்டி எடுப்பவர் சலீம் என்று குறிப்பிட்டு கேள்வி கேட்கிறார். அதற்கு யோகேந்திர யாதவ் இந்தியில் பதில் அளிக்கிறார். என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.

நிலைத் தகவலில், "இவரை "சலீம்" என்று யாருக்கும் தெரியாது. கடந்த 2 தசாப்தங்களாக இவரை யோகேந்திர யாதவ் என்று அறிந்து நாம் ஏமாந்து வருகிறோம்.

Guess no one knew him as "Salim".

See how from last 2 decades we've been fooled to know him as "Yogendra Yadav" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ட்விட்டர் பதிவை Saravanaprasad Balasubramanian என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி அரசியலில் பிரபலமானவர் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியிலிருந்த இவர் தற்போது தனிக் கட்சி நடத்தி வருகிறார். இவர் இந்து பெயரில் உள்ள இஸ்லாமியர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.இந்த வீடியோ உண்மையானதா, அல்லது எடிட் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. எனவே, உண்மையான வீடியோவை தேடி எடுத்தோம். Jist என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த யூடியூப் சேனலில் சில கீ வார்த்தைகள் பயன்படுத்தி வீடியோவை கண்டுபிடித்தோம். முழுக்க முழுக்க இந்தியில் பேட்டி இருந்தது. எனவே, இந்த வீடியோவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மொழிமாற்றம் செய்து தர கேட்டோம்.

பேட்டி எடுத்த நபர் சலீம் என்ற பெயரின் பின்னணி என்ன என்று கேட்கிறார். அதற்கு அவர், "என்னுடைய தாத்தாவின் பெயர் ராம் சிங். அவர் ஹிசார் என்ற ஊரில் உள்ள கல்வி நிறுவனத்தின் விடுதியில் வார்டனாக இருந்தார். அப்போது அந்த விடுதியில் இருந்த சில மாணவர்கள் அருகில் உள்ள மசூதியில் சில அசம்பாவித செயல்களில் ஈடுபட்டனர். விடுதிக்கு வந்த இஸ்லாமியர்கள், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் அதற்கு என் தாத்தா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் என் தாத்தா மீது தாக்குதல் நடத்தியது. இதில் என் தாத்தா உயிரிழந்தார். மாணவர்கள் செய்த செயல், பதிலுக்கு இஸ்லாமியர்கள் நடத்திய தாக்குதல் எல்லாம் அப்போது எட்டு வயதே ஆன என் அப்பா மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் ஆர்.எஸ்.எஸ்-ல் இணையவில்லை. ஏனெனில் அது காந்தியின் காலம். காந்தியின் வாழ்க்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காலம். எனவே, தன் பிள்ளைகளுக்கு இஸ்லாமியப் பெயர் சூட்டுவது என்று முடிவு செய்தார். இதன் மூலம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த முயன்றார் என்று நினைக்கிறேன்.

நான் பிறந்த உடன் எனக்கு சலீம் என்று பெயர் சூட்டப்பட்டது. நான் பள்ளிக்கு செல்லும் போது அது விசித்திரமாக இருந்தது. எல்லோரும் நான் இந்துவாக இருந்தும் சலீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று கேட்டார்கள். நான் தத்தெடுக்கப்பட்டேன், வளர்ப்பு மகன் என்று எல்லாம் கேலி - கிண்டல் தொடர்ந்தது. ஒரு வருடத்திற்குள் என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பெயரை மாற்றினால்தான் பள்ளிக்குச் செல்வேன் என்று கூறினேன். அதனால் என் பெயர் யோகேந்திரா என்று மாற்றப்பட்டது" என்று கூறுகிறார்" என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மைப் பதிவைக் காண: ceoharyana.gov.in

மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவரது வேட்புமனு தாக்கல் பத்திரத்தையும் நமக்கு அளித்தனர். அதில், அவரது பெயர் யோகேந்திர சிங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. யோகேந்திர சிங் தன்னுடைய சிறு வயது அனுபவத்தைப் பகிர்ந்திருந்ததை சரியாகத் தெரிந்துகொள்ளாமல், அவர் இஸ்லாமியர் என்று வதந்தி பரப்பியிருப்பது இதன்மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சமூக ஆர்வலரும் அரசியல்வாதியுமான யோகேந்திர சிங் யாதவ் இந்து இல்லை, உண்மையில் அவர் இஸ்லாமியர், அவரது பெயர் சலீம் என்று அவரே ஒப்புக்கொள்கிறார் என்று பரவும் தகவல் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வட இந்திய அரசியல்வாதி யோகேந்திர யாதவின் உண்மையான பெயர் சலீமா?

Written By: Chendur Pandian

Result: Misleading