
வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வக்ஃப் போராட்டத்தில் சின்ன ( இந்திரா காந்தி ) பிரியங்கா காந்தி அவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை இதற்கு முன்பே பார்த்த நினைவு இருந்ததால் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டில் இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊடகங்கள் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. ஏஎன்ஐ, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கூகுளில் தேடிய போது, விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வக்ஃப் திருத்த சட்டமானது முதலில் 2024ம் ஆண்டில்தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ 2022ம் ஆண்டு ஆகஸ்டில் எடுக்கப்பட்டுள்ளது. 2024ல் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு 2022ல் போராட்டம் நடத்தியிருக்க வாய்ப்பில்லை.
உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive
விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக பிரியங்கா காந்தி நடத்திய போராட்டத்தின் வீடியோவை எடுத்து வக்ஃப் சட்டத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி போராடினார் என்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2022ல் பிரியங்கா காந்தி போராட்டம் நடத்திய வீடியோவை 2025ல் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டாரா பிரியங்கா காந்தி?
Written By: Chendur PandianResult: False
