
இளம் பெண் ஒருவர் இன்பநிதி (உதயநிதியின் மகன் இன்பநிதியைப் போன்று தோற்றம் அளிக்கும் நபர்) மற்றும் இன்னொருவருக்கு முத்தம் அளித்தார் என்று சமத்துவ பொங்கல் கொண்டாடி இன்பநிதி என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இரண்டு இளைஞர்களுக்கு இளம் பெண் ஒருவர் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு இளைஞர் பார்க்க தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி போன்று இருக்கிறார். நிலைத் தகவலில், “இன்பாவின் சமத்துவ பொங்கல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு பதிவில், “எனக்கு தெரிந்த ஒரு IT SaaS தொழிலதிபர், 50 வயது. PhD பட்டதாரி. தமிழகத்தின் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், எலன்மஸ்க் என்ற என்னற்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர். அதிதீவிர உடன்புறப்பு. சின்னவரின் சின்னவர் செய்த இந்த சம்பவ போட்டோவை அவருக்கு காண்பித்தேன். உடனே அவர் சொன்ன விஷயம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
தமிழ்நாடும் நாளை தென் கொரியாவை போல முன்னேற வேண்டும் என்றல் நமக்கு அந்த நாட்டுடன் நெருங்கிய உறவு வேண்டும். அதற்காகத்தான் இப்போதிருந்தே கொரியா தோழியை தேர்தெடுத்துள்ளார் என்றார். யார் அந்த கொரியா தோழியின் சீனா தோழர் என்றேன், அதற்க்கு அவர்: “நாளை சீனா, கொரியா மற்றும் திராவிட நாடு கூட்டுப்படை உலகையே ஆளும். அதற்க்கான கூட்டணி இன்றிலிருந்தே துடக்கம்” என்றார்.
அப்படியென்றல் இந்தியா, இந்து மதத்தின் நிலைமை என்ன என்று கேட்டேன் அதற்கு அவர், “எங்கள் மந்திரிகள் இளவரசருக்கு பணிவிடை செய்த பிறகு பெரியார் படைகொண்டு ஆரியர் இருந்த சுவடு இல்லாமல் செய்து விடுவார்கள்.” என்றார். அவர் சொல்வதை பார்த்தல் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புகைப்படத்தில் உள்ள நபர் இன்பநிதி போன்று இருக்கிறார், ஆனால் பார்த்தாலே தெரிகிறது அவர் இன்பநிதி இல்லை. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போன்று அந்த பெண்ணைப் பார்க்க கொரியா பெண் போலவும் இல்லை. புகைப்படத்தில் அவர்கள் பின்னால் உள்ள கடையில் கொலம்பியா என்று எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மேலும் அந்த இளைஞர்கள் மற்றும் பெண்ணை பார்க்க கொலம்பியா நாட்டைச் சார்ந்தவர்கள் போல உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி இளம் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக உதயநிதியிடம் கேட்டபோது, “இன்பநிதிக்கு 18 வயது ஆகிவிட்டது. அது அவரது தனிப்பட்ட விஷயம்” என்று கூறினார். எனவே, இந்த புகைப்படமும் உண்மையாக இருந்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியிருக்க மாட்டார்கள். ஆனால், இது இன்பநிதி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2019ம் ஆண்டில் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியிருந்ததைக் காண முடிந்தது. அதில் இரண்டு நண்பர்களுக்கு ஒரே பெண் தோழி, அந்த இரு இளைஞர்களுக்கு இடையேயும் எந்த மோதலும் வந்ததில்லை என்று நையாண்டியாகப் பதிவிட்டிருந்தனர். ஆனால், இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் யார் என்று எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் 2019ம் ஆண்டிலேயே பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் மகள் இவர் என்று கூறி இந்த புகைப்படத்தை வட இந்தியாவில் பலரும் வைரலாக பதிவிட்டு வந்திருந்ததை காண முடிந்தது. இது தொடர்பாக ஆங்கில ஃபேக்ட் செக் ஊடகம் ஒன்றில் 2019ம் ஆண்டிலேயே கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில், அந்த பெண் பாஜக எம்.எல்.ஏ-வின் மகள் இல்லை என்றும் இந்த புகைப்படம் வெளிநாட்டைச் சார்ந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். 2019ம் ஆண்டில் இன்பநிதியின் புகைப்படங்களை தேடிப் பார்த்தோம். அப்போது இளைஞராகாத சிறுவன் தோற்றத்தில் இன்பநிதி இருந்தார். அதனால் அப்போதே இது இன்பநிதி என்று வதந்தி பரவவில்லை. இளைஞராக தோற்றம் மாறிய சூழலில் வதந்தி பரப்பியுள்ளனர்.
கூகுள் லென்ஸில் இந்த தெளிவில்லாத புகைப்படத்தை பதிவிட்டு தேடிய போது, பல நல்ல தெளிவான தனித்தனி புகைப்படங்கள் கிடைத்தன. அதை பெரிதுபடுத்திப் பார்த்த போது அதில், CC cine colombia என்று இருந்தது. இந்த பெயரை கூகுளில் டைப் செய்து தேடிய போது, அது கொலம்பியாவில் உள்ள ஒரு மால் என்பது தெரியவந்தது. மேலும், மூவரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட இடத்தின் வேறு சில புகைப்படங்களும் நமக்குக் கிடைத்தன.
இன்பநிதி 2004ம் ஆண்டு பிறந்ததாக கூகுள் பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு முதன் முதலாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அப்போது இன்பநிதிக்கு 15 வயதுதான் இருந்திருக்கும். ஆனால் புகைப்படத்தில் உள்ள நபருக்கு வயது 20-க்கு மேல் இருக்கும். இன்பநிதி 2021ம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க ஸ்பெயின் சென்ற போது வெளியான வீடியோ நமக்கு கிடைத்தது.
மேலும் கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்துகொண்டபோது 2021ம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் நமக்குக் கிடைத்தன. அதில், உள்ள தோற்றத்திற்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ள இளைஞரின் தோற்றத்திற்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு இருப்பதை காண முடிந்தது. இவை எல்லாம் இந்த படத்தில் உள்ள நபர் இன்பநிதி இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
உண்மைப் பதிவைக் காண: Instagram
முடிவு:
கொலம்பியா நாட்டில் 2019ம் ஆண்டு இளம் பெண் ஒருவர் தன் ஆண் நண்பர்களுக்கு முத்தம் கொடுத்தபோது எடுத்த படத்தை இப்போது, படத்தில் இருப்பது இன்பநிதி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பெண்ணுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய இன்பநிதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
