
புதுப்பேட்டை திரைப்பட பாணியில் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archive
மண மேடையில் மண மகளுக்கு தாலி கட்டாமல், அருகிலிருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் Behindwoods லோகோ உள்ளது. வீடியோவின் மீது, “தாலியில் கவுந்த மாப்பிள்ளை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வாயஸ்ஓவரில், “யாருமே எதிர்பாராத தருணத்தில் நடந்த இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகிட்டு வருது. சிலர் இதை சீரியல் ஷூட்டிங், ஸ்கிரிப்ட் என்று பேசிக் கொண்டிருக்கும் போது, சில பேர் இது நிஜமாக நடந்தது, நான் அந்த கல்யாணத்திற்கு போனேன் என்று கூறி வருகின்றனர். எங்கு, எப்போ எடுக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரியாத சூழலில், முன்னரே அந்த மணமகளிடம் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிவித்திருக்கலாம்” என்பது போன்று ஒருவர் பேசியுள்ளார்.
நிலைத் தகவலில், “புதுப்பேட்டை பட பாணியில் திருமணத்தில் Twist.. Girl Bestie மீது பாய்ந்து தாலி கட்டிய மாப்பிள்ளை, வேறொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியதன் மூலம் மணப்பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் அந்த மாப்பிள்ளை. இதெல்லாம் எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? வேறொரு பெண்ணை விரும்பி இருந்தால் இந்த கல்யாணத்திற்கு ஏன் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் வேறு ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டியதாக வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. Behindwoods வெளியிட்டிருந்த உண்மை வீடியோவை தேடி எடுத்தோம். வாய்ஸ் ஓவரில் இந்த வீடியோ உண்மையா, பொய்யா என்று தெளிவாக குறிப்பிடாமல் நடந்த உண்மை சம்பவம் போல் வெளியிட்டிருந்தனர். நிலைத் தகவலில். “‘Shooting-ஆ இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா-ங்க… மணமேடையில் நடந்த உச்சக்கட்ட Twist..!'” என்று குறிப்பிட்டிருந்தனர்.
வீடியோவை முதலில் வெளியிட்ட Behindwoods உண்மைத் தன்மையை சரி பார்க்காமல் உண்மை சம்பவம் போல் வெளியிட்டிருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யூடியூப் சேனல் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “Shooting Scene for Telugu serial ‘Muthyamanthamuddu’ 😅” அதாவது முத்தியமந்த முட்டு என்ற தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் இடம் பெற்ற காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், யூடியூபில் Muthyamantha Muddu திருமண காட்சி எபிசோட் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். 112வது எபிசோடில் இந்த திருமண காட்சி வந்திருந்ததைக் காண முடிந்தது. அது மட்டுமின்றி, இந்த திருமண காட்சியை ஒளிப்பதிவு செய்த போது எடுக்கப்பட்ட வேறு சில வீடியோக்களும் கூட நமக்கு கிடைத்தன. இதன் மூலம் இந்த வீடியோ உண்மையாக நடந்தது இல்லை, தெலுங்கு டிவி தொடரில் இடம் பெற்ற காட்சி என்பது உறுதியாகிறது.
முடிவு:
தொலுங்கு டிவி சீரியல் காட்சியை உண்மையில் நடந்தது போன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:புதுப்பேட்டை பாணியில் திருமணம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
