
மெய்தி மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடும் குக்கி இன பெண் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுவினர் போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூரில் மொய்தி இன ஆதிவாசி மக்களுக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடும் குக்கி இன ஆதிவாசி பெண்.. எதோள்ல இருக்குற லாஞ்சர் எப்படி வந்துச்சுண்ணு கேட்டுராதீங்கல…கேட்டா நீ சங்கிப்பயலாதான் இருப்பாய்.. தனக்கென ஒரு கட்டமைப்பும் வசதியும் வந்தா …??? கிறுஸ்தவமும் தீவிரவாதத்துக்கு விதிவிலக்கல்ல.. உதாகரணம்…விழிஞ்ஞம் துறைமுகம் , குமரி துறைமுகம் , ஸ்டெர்ட்லைட் ஆலை, மணிப்பூர் கலவரம்..
நாலு பேர மதம் மாத்திட்டு அவன் பாட்டுக்கு அல்லோலியாண்ணு சொல்லிட்டு போவான் என்று நினைக்க வேணாம்…அவனுக்கான கட்டமைப்பும் வசதியும் அமைந்தால் அவனோட இன்னொரு முகத்தை பார்க்கலாம்… நோட் தி பாயிண்ட்…பாதிரி பொன்னையாவின் பேச்சை திரும்ப கேட்டுப்பாருங்க புரியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட பதிவை ஹிந்து என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூலை 26ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மெய்தி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் போராட்டம் என்று எதனால் போராட்டம் நடக்கிறது என்பது கூட பதிவிடப்பட்டுள்ளது. மெய்தி மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்குக் குக்கி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணிப்பூரில் போராட்டம் மூண்டது.
மணிப்பூரின் மக்கள் தொகையில் 64.6 சதவிகிதம் பேர் மைத்தி இனத்தைச் சார்ந்தவர்கள் என்று 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவர்கள் மாநிலத்தின் 10 சதவிகித நிலப் பரப்பில் இம்பால் சமவெளிப் பகுதியில் வசிக்கின்றனர். 60 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத் தொகுதியில் 40 இடங்கள் மைத்தி மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது.
குக்கி, நாகா போன்ற பழங்குடியினர் மணிப்பூர் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர். இவர்களிடம் 90 சதவிகித நிலப்பரப்பு உள்ளது. இது மலைப் பகுதி. பழங்குடியினர் இடங்களில் பழங்குடியினர் மட்டுமே நிலம் வாங்க முடியும் என்பதாலும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்காகவும், தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மைத்தி மக்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் போராட்டம், வன்முறை நிகழ்ந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும் மணிப்பூரின் எல்லா தரப்பினரும் ஏதோ ஒரு காலத்தில், சூழலில் இந்திய பாதுகாப்புப் படைக்கு எதிராகவும் சண்டையிட்டுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது அங்கு நிகழ்ந்து வரும் வன்முறையின் போது எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2010ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I e-pao.net I Archive 2
குக்கி நேஷனல் ஃபிரண்ட் என்ற பழங்குடியின மக்களுக்கான அமைப்புக்கும் இந்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து. அதில் குக்கி நேஷனல் ஃபிரண்ட் தன்னுடைய செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வது (Suspension of Operations) என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தங்கள் ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைத்ததாக இது தொடர்பான வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த புகைப்படத்தை தி இந்து நாளிதழ் 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவேற்றம் செய்திருப்பதைக் காண முடிந்தது. 2010ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தி இந்து நாளிதழ் பதிவிட்டிருந்தது. இதன் மூலம் தற்போது மணிப்பூரில் நடந்துவரும் கலவரத்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது இல்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
2010ம் ஆண்டு இந்தியாவிடம் தங்கள் ஆயுதங்களைக் குக்கி போராளிக் குழுக்கள் ஒப்படைத்த புகைப்படத்தை எடுத்து, தற்போது மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்டுள்ள குக்கி இன பெண் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மணிப்பூரில் குக்கி இன கிறிஸ்தவ பெண்ணின் கையில் ராக்கெட் லாஞ்சர் உள்ளது என்று பரவும் புகைப்படம் 2010ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் தற்போது மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மெய்தி மக்களை எதிர்த்து ஆயுதங்களுடன் போராடும் குக்கி பெண் என்று பரவும் படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
